உருக்கு இறக்குமதி குறைப்பு!


இந்தியாவின் உருக்கு இறக்குமதி 40 முதல் 45 சதவிகிதம் குறைந்துள்ளதாக இந்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஒருங்கிணைத்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேந்திர சிங், “உருக்கு இறக்குமதிக்கு, இறக்குமதிக் குவிப்பு வரி விதித்தது மற்றும் உள்நாட்டு உற்பத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தது போன்ற சில காரணங்களால் உருக்குத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உருக்கு இறக்குமதி அளவும் 40 முதல் 45 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் உருக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா 1.5 சதவிகிதம் மட்டுமே உருக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி அளவை அடுத்த சில ஆண்டுகளில் 6 - 7 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 1.5 சதவிகிதம் ஏற்றுமதி செய்கிறோம் என்று மகிழ்வடைவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.