மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வினோத் குமார் - விவசாயத்துக்கு மாறிய பட்டதாரி!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: வினோத் குமார் - விவசாயத்துக்கு மாறிய பட்டதாரி!

தென்சென்னையிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் செய்யூர். அந்தக் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார் 32 வயது இளைஞர் வினோத் குமார். இவர் முன்னாளில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு நகர வாழ்க்கையில் பரபரப்பாக வாழ்ந்துவந்தவர். தற்போது முழுநேர விவசாயத்துடன் வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இவரைப் பற்றிய சுவாரஸ்யமான கதையை இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

வினோத் குமார் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவருடைய தாத்தா 60 வருடங்களுக்கு முன்பு செய்யூரில் முழுநேர விவசாயம் மேற்கொண்டு வந்தார். ஆனால், இவருடைய தந்தை வேலைக்காக 1960களில் நகரத்தை நோக்கிக் குடிபெயர்ந்தார். இவருடைய அப்பா சென்னையில் பள்ளி முதல்வராகப் பணிபுரிந்தார்.

நகரங்களில் இருந்திருந்தாலும் விடுமுறை நாள்களிலும், திருவிழாக் காலங்களிலும் கிராமத்துக்குச் செல்வதை இவருடைய குடும்பம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அதேசமயம் இவருடைய தந்தையும் பகுதி நேர வேலையாக விவசாயத்தையும் தொடர்ந்துள்ளார். இப்படியே வாழ்க்கை நகர்ந்துள்ளது. வினோத் குமார் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டமும், மனிதவளத் துறையில் மேலாண்மை பட்டமும் பெற்றார். கல்வியை முடித்த பிறகு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

படிக்கும்போது வினோத் குமாருக்கு எதிர்காலத்தைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லை. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் சென்ற வேலையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஆனால் நான்கு வருடங்களுக்குப் பிறகு வேலை கடுமையாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இது அவருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிப்ட் முறையிலும், சில நேரங்களில் 24 மணி நேரமும் பணி செய்யும் சூழல் நேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த வெளி உலகையும் தொலைப்பதைப் போல உணர்ந்துள்ளார். நண்பர்களைப் பார்க்கவும், குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்கவும் இயலாமல் போயுள்ளது. இது அவருக்கு மன அழுத்தத்தை அளித்துள்ளது. இதிலிருந்து ஒரு மாற்றத்தை விரும்பினார்.

2011ஆம் ஆண்டில் தொடர்ந்து இதே வேலையைச் செய்வதால் களைப்படைவதைப் போல உணர்ந்துள்ளார். இதையடுத்து ஓய்வெடுக்க விரும்பினார். தன்னுடைய சேமிப்பை வைத்து இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கவும் விரும்பினார். அடுத்த ஒரு வருடம், மூன்று மாதங்களில் இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் எப்படி வாழ்கின்றனர் எனவும், இவருடைய வாழ்க்கைக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது குறித்து அறிய விரும்பி இந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஆனால், இந்தப் பயணம் இவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவின் தொழில் துறை வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால், விவசாயத்தின் நிலை பரிதாபமாக இருந்தது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள, பல்வேறு விவசாயிகளை இவருடைய பயணத்தில் சந்தித்தார். விவசாயிகளின் குழந்தைகள் வேறு தொழிலுக்குப் போவதாக அவர்கள் கூறினர். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் இவர்கள் வேறு தொழிலுக்குச் செல்வதாகக் கூறினர். இது இவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து வினோத்துக்குப் புதிய யோசனை பிறந்தது. தன்னுடைய பயணம் முடிந்து சென்னை திரும்பிய பிறகு தன்னுடைய பெற்றோரிடம் தான் முழுநேரப் பணியாக விவசாயம் செய்யப் போவதாக கூறினார்.

இவர் தற்போது கம்பு, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறார். அதிலும் குறைந்த நீரைப் பயன்படுத்தி இவர் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள தனது தந்தையுடன் பயணித்தார். பயிற்சிகள் எடுத்தார். பல்வேறு வகையான நிலங்களில் பணியாற்றியும் பழகினார். இவருடைய கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தார். தன் நிலத்தில் தான் உழுவதோடு மட்டும் இருக்கவில்லை.

“இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது கிடைத்த உற்பத்தியை விடக் குறைவாகவே இருக்கும். அதே அளவிலான உற்பத்தியைப் பெற குறைந்தது மூன்று வருடங்களாவது சாகுபடி மேற்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் நிச்சயமாக வெற்றிபெறும். வருவாய் நிறையக் கிடைக்கும். ஆனால், இதெல்லாம் உடனடியாக நடக்காது. இதற்கு பல்வேறு வழிமுறைகளை நான் கண்டறிந்துள்ளேன்” என்கிறார் வினோத்.

மற்ற விவசாயிகளிடமும் முதன்முறை இயற்கை உரங்களையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தச் சொல்கிறார். அடுத்தமுறை ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்கிறார். இதனால் விவசாயிகள் மெதுவாக இயற்கை விவசாயத்துக்கு மாறுகின்றனர். இதனால் அறுவடை குறைந்தாலும் பெரியளவில் வேறுபாடு இருக்காது. அறிவைப் பகிர்ந்துகொள்வதிலும் வினோத் முக்கியத்துவம் செலுத்தினார். மத்திய, மாநில அரசுகள் கொண்டுவருகின்ற நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாகக்கொண்டு செல்கிறார்.

ரசாயன உரங்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதையும், இதனால் சாகுபடி செலவு அதிகரிப்பதையும் விவசாயிகள் உணர்ந்துள்ளனர். அதேசமயம் இவர்களின் வருவாய் அதிகரிக்கவேயில்லை. ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது அதன் பாதிப்புகளிலிருந்தும் விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. இதுபோன்று இயற்கை விவசாயத்தில் உள்ள பல நன்மைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

விவசாயம் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும் பணிகளையும் வினோத் மேற்கொண்டார். லயோஸ் மற்றும் வியட்நாம் போன்ற சிறிய நாடுகள் விவசாயத்தில் பல்வேறு பாரம்பர்ய முறைகளைக் கையாள்வதைத் தெரிந்துகொண்டார். இந்த முறைகள் இவருக்கு மிகவும் பயனளித்தன. ஆவணங்கள் சேகரிப்புப் பணிகளுக்காக இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, லயோஸ், கம்போடியா, வியட்நாம், மியான்மார், வங்கதேசம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“முந்தைய பணியில் எனக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. பல்வேறு ஊக்கங்கள் மற்றும் சலுகைகள் கிடைத்தன. ஆனால், அந்தப் பணியில் நிம்மதி இல்லை. இப்போது என்னைச் சுற்றி நிறைய மக்கள் உள்ளனர். மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்” என்கிறார் வினோத் குமார்.

கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து விவசாயத்துக்கு மாறிவந்த வினோத் குமார் வாழ்க்கை தன்னலம் கடந்து தன்னைச் சார்ந்தவர்களின் மாற்றத்துக்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. விவசாயத்திலிருந்து கார்ப்பரேட்மயம் நோக்கி மக்கள் நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில் தலைகீழ் மாற்றத்தை வினோத் கண்டிருக்கிறார்.

தகவல்கள்: தி பெட்டர் இந்தியா (இந்த ஊடகத்தில் தனன்யா சிங் என்பவர் வினோத் குமாரிடம் கண்ட நேர்காணலிலிருந்து இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன)

-பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: பிரேம் கணபதி - தோசா பிளாசா

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018