இரண்டாவது இடத்தில் காங்கிரஸ்!


அதிமுக பிளவுபட்ட பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாவது கட்சியாக விளங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும் இதே போன்ற கருத்தையே கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 14) செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய திருநாவுக்கரசர்,
"தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை என்று நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என எப்படிக் கூறமுடியும் என்று தெரியவில்லை. தமிழகம் வளர்ச்சிப் பாதையிலும் செல்லவில்லை. ஊழல் நிறைந்த ஒரு அரசுதான் இங்கு நடைபெறுகிறது. பாஜகவின் பினாமி ஆட்சியான இந்த அதிமுக ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் அதிமுக பிளவுபட்ட பிறகு காங்கிரஸ் இரண்டாவது கட்சியாக விளங்குகிறது என்று கூறினார்.
வைரமுத்து மீது தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?
வைரமுத்து குறிப்பிட்ட கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால் வைரமுத்துவும், தினமணி பத்திரிகையும் வருத்தம் தெரிவித்த பிறகும் அவர்கள் மீது ஹெச்.ராஜா போன்றவர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஹெச்.ராஜா, இந்தியாவுக்கே ராஜா என்று நினைத்துக்கொண்டு விமர்சனம் செய்து வருகிறார். ராஜா தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா?
இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளதென்றால் தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. ஆனால் சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறோம். தற்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். வரும் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்தே செயல்படுவோம்.