மதிய உணவுத் திட்டத்தில் கம்பு!

கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் மதிய உணவுத் திட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருளான கம்பு வழங்கும் திட்டத்தை ‘தி அக்ஷய பாத்ரா’ அறக்கட்டளை (டி.ஏ.பி.எஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டி.ஏ.பி.எஃப் செயல்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தத் திட்டத்துக்காக கர்நாடக அரசு மற்றும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1,622 பள்ளிகள் பயன்பெறுகின்றன. அதில் 10 பள்ளிகள் பெங்களூருவில் உள்ளன. இதன்படி வாரத்துக்கு இருமுறை மதிய உணவுடன் சேர்த்து கம்பு வகை உணவுகளும் வழங்கப்படுகிறது.
இம்மாதத்தின் தொடக்கத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்குக் கம்பு தின்பண்டங்கள் வழங்கும் திட்டம் தெலங்கானாவில் தொடங்கப்பட்டது. கர்நாடக மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து கிடைப்பதோடு, கம்பு விவசாயிகளும் இதனால் பயன்பெறுவார்கள். படிப்படியாக இத்திட்டத்தை மற்ற மாநிலங்களுக்குக்கொண்டு செல்லவும் டி.ஏ.பி.எஃப் திட்டமிட்டுள்ளது. தற்போது 12 மாநிலங்களில் உள்ள 16.5 லட்சம் மாணவர்களுக்குத் தினசரி மதிய உணவு வழங்கிவருகிறது. கம்பு உணவு வகைகளை மற்ற மாநிலங்களும் கொண்டு செல்ல மத்திய அரசுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.