மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

பொங்கல் பண்டிகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு!

பொங்கல் பண்டிகை:  சென்னையில் பலத்த பாதுகாப்பு!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மெரினா மற்றும் கிண்டி பூங்கா போன்ற இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் காணும் பொங்கலுக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இன்று சூரிய பொங்கலும் நாளை (ஜனவரி 15) மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாள்களில் பொழுதுபோக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காணும் பொங்கல் (ஜனவரி 16) தினத்தில் மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு பொங்கல் விழாவில் மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோரும், கிண்டி சிறுவர் பூங்காவில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களும் கூடி மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காணும் பொங்கலுக்குப் பலத்த பாதுகாப்பும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணும் பொங்கலுக்கு வருபவர்கள் ஆர்வம்மிகுதியால் கடலில் குளிப்பார்கள். இதனால் உயிர் இழப்பு ஏற்படும். இதைத் தடுக்க அண்ணா நினைவிடத்தின் பின்பகுதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை சவுக்குக் கட்டை அமைத்துத் தடுப்பு வேலி போடப்படும்.

மணலில் வேகமாகச் செல்லும் ஐந்து வண்டிகளும் நிறுத்தப்படும். இதேபோல பல இடங்களில் கூடாரம் அமைத்து, பாதுகாப்பு மற்றும் சேவைப்பணியில் போலீஸார் ஈடுபடுகிறார்கள். கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும்விதமாகக் கடந்த முறையைப் போல கைகளில் ‘டாக்’ கட்டப்படும். அதில் போன் நம்பர் எழுதப்பட்டிருக்கும்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன் மேற்பார்வையில் மெரினா மற்றும் அண்ணா சதுக்கம் போலீஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

காணும் பொங்கல் தினத்தன்று கூட்டம் அலைமோதும் என்பதால் கூடுதலாக நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். மேலும், அன்றைய தினத்தில் 100 பேர் பணியில் இருப்பார்கள். கூடுதலாக 50 வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், தடுப்பு வேலி அமைத்து எட்டு வழிகளில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல வெளியே வருவதற்கான வழியும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி உள்பட பல்வேறு வசதிகளும் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். இதேபோல வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018