குடியரசு தினம் முதல் சுற்றுப்பயணம்!

வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்திலிருந்து ஆக்டிவ் அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் கமல்ஹாசன் நேற்று (ஜனவரி 13) அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வந்தார். தனது பிறந்த நாளில் பேசிய கமல்ஹாசன், “அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். சில ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகிறது. ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் இறுதியில் ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியென்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பின்போது, ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கு வாழ்த்துகள் வருக வருக’ என்று கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.