கூட்டணியை அதிகரிக்கும் மணிரத்னம்


கார்த்தி நடிப்பில் உருவான ‘காற்று வெளியிடை’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத நிலையில் மணிரத்னம் தற்போது பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கியுள்ளார். நாளுக்கு நாள் இந்தக் கூட்டணியில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் சில தோல்விப்படங்கள் வந்தாலும் அடுத்து அவர் என்ன படம் இயக்குகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. அதிலும் நடிப்புக்காக கொண்டாடப்படும் இத்தனை நடிகர்களும் ஒரே படத்தில் வரும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது.
தற்போது, இந்தப் படத்தில் மலையாளப் படமான அங்கமாலி டைரீஸ் மூலம் கவனம்பெற்ற ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார்.