மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: நாம் ஏமாந்துகொண்டே இருக்கலாம்!

சிறப்புக் கட்டுரை: நாம் ஏமாந்துகொண்டே இருக்கலாம்!

பா.நரேஷ்

மத்திய அரசு வளர்ச்சி என்ற பெயரில் இப்படித்தான் ஏமாற்றும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கதறிக்கொண்டிருக்கின்றனர். இன்று, ஆம் உங்களை ஏமாற்றுவதுதான் எங்கள் திட்டம் என்று நாசூக்காக ஒப்புக்கொண்டுள்ளது மத்திய அரசு.

சாமானிய மக்களையும் சில்லறை வணிகர்களையும் ஒழிக்க வேண்டும் அல்லது அவர்களை நுகர்வு கலாசாரத்தின் அடிமைகளாக மாற்ற வேண்டும். அப்போதுதான் பெருவணிகமும், பெருமுதலாளிகளும் செழித்து வளருவார்கள். கட்சிக்கும் கல்லா கட்டும். இதுதான் மத்தியில் ஆளும் பிஜேபியின் வளர்ச்சிக் கொள்கை. பிஜேபிக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் இதேதான். ஏனெனில், அந்நிய நேரடி முதலீட்டை நாட்டினுள் அனுமதித்ததில் அவர்களுக்கும் கணிசமான பங்குள்ளது. கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல்வாதிகளின் கொள்கையும் இதுதான்.

இவ்வளவுக்கும் ஆதாரம் வேண்டுமா? இதோ அறிக்கை கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

அரங்கேறிய நாடகங்கள்

இந்திய சில்லறை வர்த்தகத்தில் நூறு சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒற்றை வணிக முத்திரை சில்லறை வர்த்தகப் பிரிவில் நேரடியாக 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்கெனவே சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு இருந்துதான் வந்துள்ளது. ஆனால், அப்போது 49 சதவிகிதம் வரையில்தான் நேரடியான அந்நிய முதலீடு செய்ய முடியும். 49 சதவிகிதத்துக்கு மேல் நேரடி முதலீடு செய்ய வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. அப்போதே சில்லறை வணிகர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது, மத்திய அரசிடம் எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை. நேரடியாக 100 சதவிகிதம் முதலீடு செய்ய முடியும். அது மட்டுமல்ல, அந்நிய முதலீட்டு விதிகளைத் தளர்த்தியதாகவும், அதனால் முதலீடுகள் அதிகமாகும் என்றும் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு உலக வர்த்தக ஒப்பந்தத்தின் விவசாய - வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதிலிருந்து, உணவு தானிய வணிகத்தில் தனியாரை அனுமதித்ததன் மூலம் வளர்ச்சி என்ற பெயரில் முதல் நாடகத்தை நடத்தியது மத்திய அரசு. அதன் விளைவை ரேஷன் கடைகளின் அழிவாக கண்முன் காண்கிறோம். அதன்பின் விவசாய மானிய ரத்து, பில் கேட்ஸின் வரவு, விவசாயத்தில் அந்நியர்களின் முதலீட்டை அனுமதித்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்று பற்பல நாடகங்கள்.

எதற்காக இந்த நாடகம் என்று கேட்டால், எல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிக்கவும்தான் என்கிறது மத்திய அரசு.

அதாவது இதன் உட்பொருள் என்னவென்றால், சில்லறை வணிகர்களும், சிறு குறு தொழிலாளிகளும், முதலீட்டாளர்களும் வளரும் முயற்சியைக் கைவிடுங்கள். பெருநிறுவனங்களுக்குக் கீழ் அடிமையாக இருந்து வேலைபார்ப்பது மட்டும்தான் உங்கள் வேலை என்று நாசூக்காகச் சொல்லப்படுகிறது.

வளர்ச்சி என்ற மாய வார்த்தை

இவையெல்லாம் வளர்ச்சி என்ற மாய வார்த்தையின் மறைவில் நடக்கும் அநியாயங்கள். உண்மையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் நிலத்தினுடைய தொழிலை முதன்மை தொழிலாக்கி, தொழிலாளர்களாக இருக்கும் குடிமக்களைப் பங்குதாரர்கள் ஆக்குவதுதான். இதனுடன், அந்த நாட்டில் அம்மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

அப்படிப் பார்த்தால், நம் நாட்டினுடைய முதன்மைத் தொழில் விவசாயம். விவசாயத்தின் வளர்ச்சியிலும், விவசாயிகளின் நலனிலும் மத்தியில் ஆளும் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை, டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டம் நமக்குக் காட்டியது. அடுத்ததாகத் தொழில்முனைவோரின் வளர்ச்சி. நாட்டின் குடிமக்கள் தொழில்முனைவோர் ஆவது. அந்த தொழில்முனைவோரை வளர்ச்சியின் பங்குதாரர்கள் ஆக்குவது. இதற்கான எந்த சாத்தியக்கூறும் இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதாக இருக்கிறது இந்த அந்நிய நேரடி முதலீடுக்கான அனுமதி.

இந்த அந்நிய முதலீட்டின் செய்தியை படித்துக்கொண்டிருக்கும்போதே, உலக வங்கியின் அறிக்கை ஒன்று கண்ணில்பட்டது. 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக உயரம் என்ற கணிப்பை உலக வங்கி வெளியிட்டதாக அந்தச் செய்தி இருந்தது. ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி போல, இந்த இரு செய்திகளை ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றியது. அதாவது, அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக அனுமதிப்பதின் மூலம் இந்தியாவின் ஜி.டி.பி. உயரும் என்று உலக வங்கி சொல்வதாக இருக்கிறது. அது சரி, இதற்கு உலக வங்கியை ஆட்சி செய்பவர்கள் யார் என்று தெரிய வேண்டும். உலகப் பொருளாதாரம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அதைப் படிப்பதற்குள் ஒரு பயம் எழுகிறது.

அது என்னவெனில், மத்திய அரசுகளிடம் இன்னும் பல திட்டங்கள் இருக்கலாம். பல நாடகங்கள் இருக்கலாம்.

என்ன இருந்தாலும்,

நாம் ஏமாந்துகொண்டே இருக்கலாம்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018