மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சண்டே ஸ்பெஷல்: கண்ணை அழகாக்கும் பியூட்டி புராடக்ஸ்!

சண்டே ஸ்பெஷல்: கண்ணை அழகாக்கும் பியூட்டி புராடக்ஸ்!

மணிக்கொடி

நாம் எவ்வளவுதான் அழகாக மேக்கப் போட்டுக்கொண்டாலும் முக அழகை எடுத்துக்காட்டுவதில் புருவமும் கண்களும் தனி இடத்தைத் பிடிக்கும். அந்த வகையில் கண்கள் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அதை இன்னும் அழகாக எடுத்துக்காட்ட உதவுவது அதற்காக உபயோகிக்கும் மேக்கப் சாதனங்களே ஆகும்.

கண் மையிலிருந்து தொடங்கி மஸ்காரா, ஐ லாஷ், ஐ ஷாடோ, ஐ லைனர் என அதன் வரிசையை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தவகையில் கண்களை அழகாக வைத்துக் கொள்ளவதை பற்றியும் அதற்காகப் பயன்படுத்தும் பொருள்கள் பற்றியும் இந்தத் தொகுப்பில் காணலாம்!

ஐ ஷாடோ

முதலில் உங்கள் சரும நிறத்துக்கேற்றபடியான ஒரு பேஸ் கலரைக் கண்களுக்கு மேல் தடவவும். அடுத்து பேஸ் கலரைவிட சற்றே டார்க் நிற ஷேடை அதற்கு மேல் தடவுங்கள். முதலில் தடவிய ஐ ஷேடோவின் கலர் பிரஷ்ஷில் ஒட்டியிருக்கும் என்பதால் அதை ஒரு டிஷ்யூ அல்லது துணியில் துடைத்துவிட்டு அடுத்த கலரை தடவவும். அல்லது வேறொரு பிரஷ் உபயோகிக்கவும். இல்லாவிட்டால் இரண்டு கலர்களும் ஒன்றாகி, நீங்கள் விரும்பும் ஷேடு வராமல் போய்விடும். ஐ ஷாடோவைப் பொறுத்தவரையில் அதன் நிறங்களும் பல வகையில் கிடைக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான நிறங்களை உடைகளுக்குத்தகுந்த மாதிரி பார்த்து நாம் உபயோகித்துக் கொள்ளலாம். காலை நேரங்களில் செல்லும் திருமணங்கள், கோயில் விழாக்களுக்கு என சில நிகழ்ச்சிகளுக்கு ஐ ஷாடோவைத் தவிர்ப்பது, அதிகமாக பளிச்சென்று போடாமல் தவிப்பது நல்லது. ஆனால் இரவு நேரங்களில் செல்லும் பார்ட்டி, திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு டார்க்காக போட்டுச் செல்வதன் இன்னும்கூட நம்மை அழகாகக் காட்டிக்கொள்ளலாம்.

ஐ லைனர்

கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும். ஐ லைனர்களில் பல வண்ணங்களும் வகைகளும் உண்டு. அதில் நீலம், சிவப்பு, கறுப்பு, பிங்க், ஆரஞ்சு எனப் பல நிறங்கள் உள்ளன. ஐ லைனர் க்ரீம், கேக், பென்சில் வடிவங்களில் கிடைக்கிறது. தினசரி உபயோகத்துக்கு பாட்டிலில் கிடைக்கிற ஐ லைனர் அல்லது பென்சில் ஐ லைனர் சிறந்தது. கேக் ஐ லைனரானது அழகுக்கலை நிபுணர்கள் உபயோகத்துக்குத்தான் சரியாக வரும்.

அதேபோல் கெட்டியான மற்றும் நீர்த்த தன்மையிலும் இவை கடைகளில் கிடைக்கின்றன. அதேபோல் ஐ லைனர் ஒவ்வொன்றும் அவற்றின் நிறங்களுக்கும் அதன் பிராண்டுகளுக்கும் ஏற்றது போல் அதன் விலைகளும் மாறுபடுகின்றன.

ஐ லைனர் ஆரம்ப விலை ரூ.100 முதல் 1,000 வரை செல்கிறது. அதிலும் நடனம் மற்றும் ஆர்ட்டிஸ்ட் பயன்படுத்தும் ஐ லைனர்கள் ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் கெட்டியாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட பிரஷ்ஷைக்கொண்டு பயன்படுத்தும் வகையிலும் இருக்கும். இன்னும் சில ஐ லைனர்கள் பவுடர் வகையிலும் கிடைக்கின்றன. இவை மற்ற ஐ லைனர்கள் போன்று இல்லாமல் டார்க்காகவும் அதேசமயம் பல மணி நேரங்கள் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

ஐ லைனர் போடும்போது, கண்களின் உள்ளே செல்லாதபடி, அதே நேரம் கண்களின் விளிம்பை ஒட்டியபடி தடவ வேண்டும். ஐ லைனரிலும் இன்று நிறைய கலர்கள் கிடைக்கின்றன. இதையும் உடைக்கு மேட்ச்சாகும்படி தேர்ந்தெடுக்கலாம். பார்ட்டிக்குப் போகிற போது பச்சை, நீலம் போன்ற கலர்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாரம்பர்ய உடை அணிந்து, பாரம்பர்யமான ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறபோது கறுப்பு நிற ஐ லைனர்தான் சிறந்தது.

எக்காரணம் கொண்டும் இரவு படுக்கும்போது ஐ லைனர் உள்ளிட்ட எந்த மேக்கப்பும் சருமத்தில் இருக்கவே கூடாது. சிறிதளவு பஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைக்கவும். ஒரு சொட்டு தண்ணீர் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை அந்தப் பஞ்சில் எடுக்கவும். (அளவு இதைத் தாண்டக் கூடாது). இந்தப் பஞ்சை வைத்து ஐ லைனரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். பஞ்சானது முழுக்க கறுப்பானதும் வேறொரு பஞ்சை இதே போல உபயோகித்து முழுவதையும் சுத்தம் செய்யவும். பிறகு மைல்டான கிளென்சர் வைத்து முகத்தைச் சுத்தப்படுத்தவும் அல்லது வாசனையற்ற பேபி ஆயிலைக் கொண்டும் ஐ லைனரைத் துடைத்து எடுக்கலாம்.

மஸ்காரா

மஸ்காரா என்பது கண் இமைகளை நீளமாக, அடர்த்தியாக, அழகாகக் காட்டக்கூடியது. கறுப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம், டிரான்ஸ்பரன்ட் ஷேடுகளில் மஸ்காரா கிடைக்கிறது. பார்ட்டிக்குப் போகிறவர்கள் கறுப்பு தவிர்த்த மற்ற கலர் மஸ்காராவையும், வேலைக்குச் செல்பவர்கள் கறுப்பு மஸ்காராவையும் உபயோகிக்கலாம். இமைகளை நீளமாகக் காட்ட, அடர்த்தியாகக் காட்ட, சுருளாகக் காட்ட, தனித்தனியாகக் காட்ட என ஒவ்வொன்றுக்கும் ஒருவித மஸ்காரா வந்துவிட்டது. வாட்டர் ப்ரூஃஸ் மஸ்காரா மீடியா பெண்களுக்கும், நடிகைகளுக்கும், நீச்சல் அடிப்பவர்களுக்கும் ஏற்றது.

காஜல் (எ) மை

காலம் காலமாக கண்களை அழகுப்படுத்துவதில் தவிர்க்க முடியாதது காஜல் என்கிற கண் மை. எந்த மேக்கப்பும் இல்லாமல் வெறுமனே மை மட்டும் வைத்தாலே, அந்தப் பெண்ணின் முகம் பளீரென வசீகரிக்கும். முன்பெல்லாம் வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரித்த மையைப் பெண்கள் உபயோகித்தனர். இன்று மையின் வடிவம் மட்டுமின்றி, நிறங்களும்கூட மாறிக் கொண்டிருக்கின்றன. ஆமாம், கறுப்புக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட மை, இன்று பச்சை, நீலம், பிரவுன், கிரே மற்றும் வெள்ளை நிறங்களில்கூட வருகிறது.

மை வைத்துக்கொள்ள ஆசைதான். ஆனாலும், அது வழிந்து வெளியே வரும். கண்கள் கலங்கினால் கலைந்து போகுமே எனக் கவலைப்படுகிறவர்கள், சாதாரண மையை உபயோகிக்க வேண்டாம். இப்போது வாட்டர் ப்ரூஃப் காஜல்கள் கிடைக்கின்றன. அடர்கறுப்பு நிறத்தில், வைத்துக்கொள்ள எளிதாக, அதே நேரம் 10 மணி நேரம் வரை கலையாமல் இருக்கக் கூடியவை. கண்ணீரோ, தண்ணீரோ பட்டாலும் கலையாது. இவை பென்சில் வடிவங்களில் கிடைக்கும் காஜல்களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். காஜல்களைப் பொறுத்தவரையில் வாட்டர் ப்ரூஃஸ் காஜல் மற்ற காஜல்களை விடச் சற்று விலை அதிகம். பொதுவாக காஜல்களிலும் பிராண்டுகள் பல இருப்பதால் காஜல்களுக்கு 10 ரூபாயில் ஆரம்பித்து 1200 வரையிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மை வைத்துக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் இரவு தூங்குவதற்கு முன் அதை நீக்க மறக்கக் கூடாது. சுத்தமான பஞ்சை மேக்கப் ரிமூவரில் தொட்டு, மை இட்ட இடத்தில் துடைத்து எடுக்கலாம். அதன்பிறகு வழக்கம்போல முகம் கழுவ வேண்டும். பஞ்சு அல்லது காதைச் சுத்தப்படுத்துகிற பட்ஸை ஆலிவ் ஆயிலில் தொட்டும் மையை அகற்றலாம்.

ஐலாஷ்

கண்களுக்கு மேக்கப் போடும் நிலையில் கண் இமைகளுக்கு மஸ்காரா போடுவதும் ஒன்றாக இருக்கிறது. அதில் மஸ்காரா போடும் அளவுக்குக் கண் இமையில் முடி இல்லை என நினைப்பவர்கள் அல்லது இன்னும்கூட கண் இமை அழகாக அடர்த்தியாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஐ லாஷை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐலாஷ் கண் இமை வடிவிலேயே நமக்குக் கிடைக்கிறது. அதில் கொடுக்கப்பட்டுள்ள கம் போன்ற பகுதியை நம் கண் இமைகளின் மேலே ஒட்டிக்கொள்வதன் மூலம் கண் இமை முடிகள் இன்னும் கூட அழகாக அடர்த்தியாக இருப்பது போல காணப்படும். அதன் மேலே நாம் வேண்டுமானால் மஸ்காராவை இட்டு அழகுப்படுத்தி கொள்ளலாம். ஐலாஷை பொறுத்தவரையில் அதன் விலை அதன் பிராண்டு மற்றும் அதன் தரத்துக்கு ஏற்றது போலவே இருக்கும். ஐ லாஷை ஒருமுறை உபயோகித்தபின் அதை ஒழுங்கான முறையில் அகற்றி எடுத்து வைப்பதன்மூலம் அதைத் தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லென்ஸ்

லென்ஸ் உபயோகிப்பது என்பது முன்பெல்லாம் கண்களைப் பாதுகாக்கவும், கண் கண்ணாடி போடுவதை உபயோகிக்க விருப்பம் இல்லாதவர்கள் பயன்படுத்தவுமே கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது அதுவும் கண்ணை அழகுப்படுத்தும் பொருளாக மாறியுள்ளது. கண்ணின் கருவிழியின் நிறம் கறுப்பாகவோ அல்லது பிரவுன் நிறத்திலும் உள்ளவர்கள் அதை நீலம், பச்சை என தங்களுக்குப் பிடித்த நிறத்திலோ அல்லது அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ற மாதிரியோ அதை மாற்றிக்கொள்கின்றனர். லென்ஸ்கள் இப்போது பல நிறங்கள் என இல்லாமல் பல வடிவங்களிலும் கிடைக்கிறது. ரூ.400 முதல் ஆரம்பித்து 5,000 வரையிலும் இவை நமக்குக் கிடைக்கின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி தங்கள் முக நிறங்களையும் தலைமுடியின் கலர்களையும் மாற்றிக்கொள்ள நினைக்கிறார்களோ அதேபோல் தங்களின் கண்களின் நிறங்களையும் மாற்றிக்கொண்டு ஸ்டைலாக வலம் வருகின்றனர். உடம்பில் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது நம் கண்கள். அவற்றை அழகாக வைத்துக்கொள்ள நினைப்பதில் தவறில்லை என்றாலும் அதற்காகப் பல ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் பொருள்களைக் கண்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும்கூட அவை தரமான பொருள்களாகவே இருக்க வேண்டும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018