மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

விமர்சனம்: ஸ்கெட்ச்!

விமர்சனம்: ஸ்கெட்ச்!

கதாநாயகன் தனது தொழிலில் தன்னுடைய வழியில் ஈடுபட்டுள்ளபோது, தான் செய்யும் ஒரு காரியம் மூலம் எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய கும்பலின் கோபத்தைச் சம்பாதிப்பார். அதன்மூலம் பெரும் இழப்புகளை அடைவார். இறுதியில் அந்தக் கும்பலை எதிர்த்து வெற்றி பெறுவார். வழக்கமான நமது தமிழ் சினிமாவின் இந்த பார்முலாவைக் கொஞ்சம் நீட்டி, மாற்றிச் சொல்ல முயன்றுள்ள படம் ஸ்கெட்ச். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் விஜயசந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தை மூவிங் ஃப்ரேம் தயாரித்துள்ளது.

தவணை கட்டாத இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் கையகப்படுத்தும் தொழிலைச் செய்யும் ஒரு சேட்டுவிடம் வேலைபார்க்கிறார் ஜீவா என்ற ஸ்கெட்ச் (விக்ரம்). இதேபோல் ஒரு பெண்ணின் வண்டியைத் தூக்கும்போது அவரது தோழியான அமுதவள்ளியை (தமன்னா) சந்திக்க நேருகிறது. அடிதடியில் இறங்கும் ஸ்கெட்ச் அமுதவள்ளியிடம் காதல் வயப்படுகிறார். அதைத் தொடர்ந்து ராயபுரம் குமார் என்ற ரவுடியால் பாதிக்கப்பட்ட சேட்டுவுக்கு உதவும் பொருட்டு அவரது காரை ஸ்கெட்ச் தூக்க சிக்கலுக்கு ஆளாகிறார். அதற்கு உதவிய நண்பர்கள் ஒவ்வொருவராய் இறக்க குமாரை பழிவாங்க ஸ்கெட்ச் கிளம்ப இறுதியில் என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸ்(!).

விக்ரம் காதலியைப் பின்தொடர்ந்து செல்வதும், காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் அப்பாவியாகப் பின்வாங்குவதும் அவர் வயதைத் தாண்டிய காட்சிகளாக இருப்பதால் அலுப்பைத் தருகின்றன. தமிழ் சினிமாவின் தேய்ந்துபோன காதலாகவே தமன்னா - விக்ரம் காதல் உள்ளது. ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவதில் வல்லவர் என்று படம் முழுக்க சொல்லப்பட்டாலும் ராயபுரம் குமாரின் காரைக் கடத்தும் ஒரு காட்சியில் மட்டுமே அதை உணர முடிகிறது. மற்ற அனைத்துக் காட்சிகளிலும் அவை வசனங்களால் மட்டுமே ஒப்புவிக்கப்படுகின்றன.

உணர்வு ரீதியான காட்சிகள் மூலம் ரசிகர்களை இழுக்கும் வாய்ப்பு இருந்தும் அதைத் தவறவிட்டுள்ளார் இயக்குநர். ஒவ்வொரு நண்பனின் இறப்பின்போதும் விக்ரம் துயரப்படுகிறார். அடுத்த காட்சியில் அப்படியொரு எந்த சம்பவமும் நடக்காததுபோல் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்புகிறார். இதைப் பார்த்து ரசிகர்கள்தான் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இத்தனைக்கும் அடுத்தடுத்த காட்சிகளுக்கான கால இடைவெளி என்பது ஒன்றிரண்டு நாள்கள் எனும் அளவிலேயே உள்ளது. தமன்னா தன் காதலனின் நண்பர்களின் இறப்பு பற்றி எதுவுமே தெரியாததுபோல் வந்துபோவது அயர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

ராயபுரம் குமாரின் காரைத் தூக்கும் காட்சி, குமாருக்கு ஸ்கெட்ச் போடும் காட்சி ஆகிய இரண்டும் அட்டகாசமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளின் தரத்துக்குப் பக்கத்தில்கூட மற்ற காட்சிகள் வரவில்லை என்பதுதான் சோகம்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதிக நாள்கள் செலவிட்டு ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் விக்ரம் இந்தப் படத்தில் ஜாலியாக நடித்து அசத்தியுள்ளார். அவருடைய நண்பனாக நடித்துள்ள கல்லூரி வினோத்தின் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது.

வாட்ஸ்அப்பில் வந்த பழைய ஜோக்குகளைத் தூசு தட்டி காமெடி என்ற பெயரில் சூரி செய்வதெல்லாம் ரசிகர்கள் மேல் நிகழ்த்தும் வன்முறை. பார்வையாளர்களைச் சிறிதளவுகூடச் சிரிக்கவைக்க முடியாத இவர், பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களைப் பேசுவதில் மட்டும் துடிப்போடு செயல்படுகிறார். மீண்டும் மீண்டும் பெண்களை வாகனத்தோடு ஒப்பிட்டு, ஃபர்ஸ்ட் ஹேண்ட், செகண்ட் ஹேண்ட் என்று அசிங்கப்ப்டுத்தும் அராஜகத்தைத் தமிழ் சினிமா காமெடியன்கள் எப்போது நிறுத்துவார்கள்?

பலவீனமான ஒரு பாத்திரப் படைப்பில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் தமன்னா பளிச்சென்று இருக்கிறார். பாடல் காட்சிகளிலும் இதர காட்சிகளிலும் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்கிறார்.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளுக்கு அழகூட்டுவதுடன் மட்டுமல்லாமல் மீன் சந்தை, துறைமுகப் பகுதியை அழகாகக் காட்டியுள்ளது. தமனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருகின்றன. ஸ்லோமோஷன் ஷாட்டுகளும், பின்னணி இசையும் மட்டுமே கதாநாயகன் பக்கம் ரசிகர்களை இழுத்துவிடாது என்பதைப் படம் மீண்டும் நிரூபிக்கிறது.

அதிர்ச்சியை உண்டு பண்ணுவதற்காகத் திரைக்கதையின் இறுதியில் சில கதாபாத்திரங்களைக் கொண்டுவருவதும், அதுவரை அடுக்கிய காட்சிகளுக்குத் தொடர்பே இல்லாமல் நம்பகத்தன்மை இல்லாத திருப்பங்களை வைப்பதும் திரைக்கதை உருவாக்கத்தின் மலினமான யுக்தியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் அந்த யுக்தியைத்தான் கையாண்டுள்ளார். அதுவும் இரண்டரை மணி நேரம் மாபெரும் வன்முறைகளையெல்லாம் காட்டிவிட்டுக் கடைசியில் காந்தியின் சீடர்போல கருத்து சொல்வதை ரசிகர்கள் மீது இழைக்கும் வன்கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

வடசென்னையைப் பின்புலமாகக்கொண்டு வெளிவரும் படங்களில் அங்கு வசிப்பவர்களை ரவுடிகளாக, அடியாள்களாக, குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களாகவே சித்திரித்துவந்த தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சில நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தது. ஆனால், ஸ்கெட்ச் மறுபடியும் அந்தப் பழைய பாதையிலேயே பயணம் செய்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018