மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் உச்ச நீதிமன்றம்!

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் உச்ச நீதிமன்றம்!

வி. சிவசங்கர்

கடந்த 8ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை ஆதரித்துக் கருத்துக் கூறியது. ‘தவறான செய்திகள் சில வருகின்றன என்பதற்காக ஒட்டுமொத்தமாகப் பத்திரிகையாளர்களைக் குறைகூறக் கூடாது’ என்று கூறியது.

ஆதாரின் கீழ் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காக ரசனா கைரா என்ற பத்திரிகையாளர் மீதும் சண்டிகரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை தி ட்ரிப்யூன் மீதும் இந்தியாவின் தனி அடையாள அட்டை ஆணையம் (Unique Identification Authority) எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தது. இதுபோல, நகராட்சிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் சார்பில் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக அவதூறு வழக்குகள் அவ்வப்போது தாக்கல் செய்யப்படுகின்றன.

ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் நெட்வொர்க் 18இன் நிறுவனர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ராகவ் பாஹல் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கொன்றை மீண்டும் எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் ஓர் உத்தரவை எதிர்த்து முன்னாள் பீகார் அமைச்சர் பர்வீன் அமானுல்லாவின் மகள் ரஹ்மத் ஃபாத்திமா அமானுல்லா தொடுத்த வழக்கையும் தள்ளுபடி செய்துவிட்டது. தலைமை நீதிமதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.யு.சந்திரசூட் அடங்கிய பெஞ்ச், “நாம் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஒரு சில தவறான செய்திகள் வெளிவரலாம். ஆனால், அதை வைத்து ஒட்டுமொத்தமாக ஊடகங்களின் குரலை முடக்கக் கூடாது” என்று கூறியது.

பாட்னா உயர் நீதிமன்றம் 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஒரு தீர்ப்பில் அவரது அவதூறு புகாரை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐ.பி.என். நெட்வொர்க்கின் எடிட்டர் இன் சீஃப்பாக இருந்த ராஜ்தீப் சர்தேசாய்க்கு எதிராகவும் 2011இல் நில ஒதுக்கீடு ஊழலில் தொடர்புடையவர் என்று அவரைக் குற்றம்சாட்டி வெளிவந்த செய்திக் கட்டுரைக்காக ராகவ் பாஹலுக்கு எதிராகவும் அவதூறு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஒரு தொலைக்காட்சி சேனல், தன் டி.ஆர்.பி ரேட்டை அதிகரித்துக்கொள்வதற்காக உண்மைகளைச் சரிபார்க்காமல் நிகழ்ச்சியை வெளியிட்டது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இந்தச் செய்தி உள்ளபடியே அவதூறானது என்று அவரது வழக்கறிஞர் கூறியபோது, தலைமை நீதிபதி மிஸ்ரா இவ்வாறு வாய்மொழியாகக் கூறினார்: “ஒரு ஜனநாயக நாட்டில் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

2011 முதல் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய நேரமும் பணமும் செலவிட்டனர். “அவதூறு வழக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதாக இருக்கலாம். ஆனால், ஊழல் பற்றி வெளிவரும் செய்திக் கட்டுரை தவறானது என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அது அவதூறாகக் கருதப்பட மாட்டாது” என்று குறிப்பிட்டார் நீதிபதி.

“மோசடி குறித்த செய்திக் கட்டுரையில் சில பிழைகள் அல்லது கூடுதல் வேகம் இருக்கலாம். ஆனால், நாம் ஊடகங்களுக்குப் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் முழுமையாக அனுமதிக்க வேண்டும். சில தவறான செய்திகள் வரலாம். ஆனால், அதற்காக அவர்கள் மேல் அவதூறு வழக்குப் போட்டு நீதிமன்றங்களுக்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று இந்தியத் தலைமை நீதிபதி மேலும் கூறினார்.

2011 ஜூலை மாதம், 18ஆம் தேதி ஐ.பி.என்.7 (இப்போது நியூஸ் 18), ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டது. பீகார் தொழில் துறை பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் நில ஒதுக்கீடு ஊழலில் ஈடுபட்டதாகத் தன் மீது அந்த நிகழ்ச்சி தவறாகக் குற்றம் சாட்டியது என்று ரஹ்மத் ஃபாத்திமா குற்றம் சாட்டியிருந்தார்.

குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் செய்தி அறிக்கை, ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய அக்கறையோ, எச்சரிக்கையோ, நேர்மையோ இல்லாமல் ஒளிபரப்பப்பட்டது என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். உயர் நீதிமன்றம் இந்தப் புகாரை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்குத்தான் தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் பொதுமக்களிடையே வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் வாதிட்டார். நில ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக உண்மைகளை மறைத்தும், வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளை வைத்தும், முழுக்க முழுக்க கற்பனையான, ஜோடிக்கப்பட்ட, திரித்துக்கூறப்பட்ட ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறினார். அவதூறு புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டின் முடிவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய சர்தேசாயை உயர் நீதிமன்றம் அனுமதித்தது.

“இந்த வழக்கில் அவதூறு குற்றமானது, இரண்டாண்டுகள் சாதாரண சிறைத் தண்டனைக்கு உரியது” என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே, “மாநில அரசு அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டின் ஒப்புதல் இல்லாததால் சதி செயலுக்கான குற்றப்பிரிவான ஐ.பி.சி. 120பியின் கீழ் இதைக் கொண்டுவர இயலாது” என்றும் கூறியது.

“இந்த நீதிமன்றத்தின் பார்வையில், மனுதாரருக்கு எதிரான நேரடி அவதூறு குற்றச்சாட்டு எதையும் சுமத்த இயலாது. 120பியின் கீழ் அவதூறு இழைப்பதற்கான குற்றச்சதி என்னும் குற்றச்சாட்டைச் சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: https://thewire.in/212174/supreme-court-freedom-of-expression/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018