அமெரிக்காவின் முதலீட்டு மையமாக இந்தியா!


‘அமெரிக்காவின் மாற்று முதலீட்டு மையமாக இந்தியா விளங்குகிறது’ என்று இந்தியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கென்னெத் ஜஸ்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்குமுகத்தைச் சந்தித்துவரும் சூழலில் அதற்கான தீர்வாக, மாற்று முதலீட்டு மையமாக இந்தியா இருக்கும். அதிகரித்துவரும் பொருளாதார மாற்றங்கள், புதிய தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை இருநாடுகளுக்கும் இடையில் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மோடி தலைமையிலான இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பும், இந்தியச் சந்தையின் தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பொருளாதார ஊக்குவிப்பும் வளர்ச்சியும் ஏற்படுகிறது. தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்ந்துள்ளன. 2001ஆம் ஆண்டில் 20 பில்லியனாக இருந்த இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2016ஆம் ஆண்டில் 115 பில்லியனாக அதிகரித்துள்ளது” என்றார்.
இந்தியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக கென்னெத் ஜஸ்டர் பொறுப்பேற்ற பிறகு இவர் பேசும் முதல் கொள்கைப் பேச்சு இதுவாகும்.