கார் விற்பனை டிசம்பரில் சரிவு!


2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் இந்தியாவில் 1,58,617 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2017 டிசம்பரில் மொத்தம் 1,58,326 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும், பயன்பாட்டு வாகன விற்பனை 15.03 சதவிகிதம் உயர்வுடன் 67,073 வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல, வேன் விற்பனையும் 31.34 சதவிகிதம் (14,313 வேன்கள்) உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த வாகன விற்பனையைப் பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 2,27,823 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 2017 டிசம்பரில் 5.22 சதவிகித உயர்வுடன் 2,39,712 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வணிகப் பயன்பாட்டு வாகனப் பிரிவில் டிசம்பர் மாதத்தில் 82,362 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மூன்று சக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 90.54 சதவிகித உயர்வுடன் 56,980 ஆக உள்ளது. ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மட்பெட் உள்ளிட்ட இருசக்கர வாகன விற்பனையில் 41.45 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. அதாவது டிசம்பரில் விற்பனையான இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 12,87,592 ஆகும்.