ஜல்லிக்கட்டு நடப்பது எங்களால்தான்!


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெறுவதற்கு பாஜக தான் காரணம் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று 7 நாட்கள் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை மதுரை அவனியாபுரம், பாலமேடடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு துவங்க உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 13) சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு போட்டியோடு கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு மத்திய அரசு தான் காரணம். ஏனெனில், தமிழக அரசு அவசர சட்டம் மட்டுமே பிறப்பித்தது, ஆனால் அதை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு தான் செய்தது. மாணவர்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து அவசர சட்டம் பிறப்பித்ததால் தான் இன்று காளைகள் துள்ளி குதித்து ஓடுகிறது, ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க காரணம் பாஜக தான்" என்றார்.
தொடர்ந்து பேசும்போது, சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட்களே காரணம் என்றும் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது, இந்து மத விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்று சொல்லி பிரச்சாரம் செய்வதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றும் பிறகு கஞ்சி தொட்டியும் திறக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.