தமிழகத்தில் 1.20 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குனரக அலுவலகத்தில் எச்ஐவி பாதித்தோர் மற்றும் அதன் விழிப்புணர்வுப் பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கல் நேற்று (ஜனவரி 12) கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதகிருஷ்ணன் மற்றும் எய்ட்ஸ் திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்று பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள்.
இதைத் தொடர்ந்து, "தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுக் கூட்டு மருந்து சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர். தமிழகத்தில் எச்ஐவியின் தாக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. தேசிய அளவை விட 0.28 சதவீதம் குறைவாகவும் உள்ளது. வருங்காலங்களில் இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு குறித்த மத்தியக் குழு அறிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பல இடங்களில் அக்குழு பாராட்டியுள்ளது. சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இது எதிர்காலங்களில் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும்" என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் இயங்கும் நம்பிக்கை மையத்தின் 20 ஆண்டு நிறைவையொட்டி புதிய சின்னம் மற்றும் சொற்றொடர் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லையைச் சேர்ந்த வாணி வடிவமைத்த சின்னமும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி எழுதிய சொற்றொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.