மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

களைகட்டும் ஜல்லிக்கட்டு!

களைகட்டும் ஜல்லிக்கட்டு!

அவனியாபுரம், பாலமேட்டில் நாளை (ஜனவரி 14) பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. அவனியாபுரத்தில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் 954 காளைகளும், பாலமேட்டில் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளன.

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் விழா. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டிப் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக அளவில் பிரபலமானவை. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண வெளிநாட்டினரும் வருகை தருவார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காகக் கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும் விழா கமிட்டியினரும் செய்துவருகின்றனர். அவனியாபுரத்தில் நாளையும் (14ஆம் தேதி), பாலமேட்டில் 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அவனியாபுரம், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தில் 675 வீரர்களும், பாலமேட்டில் 1,188 வீரர்களுக்கும், அலங்காநல்லூரில் 1241 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் 954 காளைகளும், பாலமேட்டில் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளன.

இன்று அலங்காநல்லூரில் காளைகளின் பதிவு நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

அவனியாபுரத்தில் நாளைக் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக குருநாதசுவாமி கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு மாடுபிடி வீரர்கள், காளைகள், பொதுமக்கள் என எந்தத் தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்குத் தங்க காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டையொட்டி அவனியாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018