கருணாநிதி நலம் பெற வேண்டும்!

‘திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜனவரி 12) சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார்.
மேலும், நேற்று சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஆறு மாதங்கள் நீட்டிக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தின்போது திமுக சார்பாக குட்கா ஊழல் பற்றி பேச வாய்ப்பு கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் தனபால் இதுபற்றி பேச வாய்ப்பளிக்கவில்லை. இதனால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.