மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஆன்மிகத்துக்கு உறவுகள் தடையா?

சிறப்புக் கட்டுரை: ஆன்மிகத்துக்கு உறவுகள் தடையா?

சத்குரு

‘ஆன்மிகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மிகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சார்ந்தவை. எனவே, ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகுமா என்னும் கேள்விக்கே இடமில்லை.

ஆன்மிகத்தில் வளர முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். மற்றவர்கள் உங்களை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. உங்கள் வலிகள், போராட்டங்கள் எல்லாமே தனிமனிதர் சார்ந்த விஷயம். எனவே, ஒவ்வொருவரும் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகம் என்பது உங்கள் உள்நிலையில் நிகழ்வது.

வெளியே என்ன செய்ய வேண்டுமென்பது உங்கள் விருப்பம். உறவுகளுடன் இருப்பதா, தனிமையில் இருப்பதா, நகரத்தில் வாழ்வதா, மலைகளுக்குப் போய் சேர்வதா என்பதெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை. அடுத்து யாருடன் உங்களுக்கு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது. எனவே, ஆன்மிகத்தையும் உறவுகளையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு அம்சங்கள். ஆன்மிகப் பாதையில் நடையிடும் பலரும் உறவுகளை உதறக் காரணம், ஆன்மிகமல்ல. அவர்களால் உறவுகளின் நிபந்தனைகளையும் நெருக்கடிகளையும் தாங்க முடிவதில்லை. உறவுகளை விட்டுவிட்டு வருமாறு ஆன்மிகம் வலியுறுத்துவதில்லை. ஆனால், பல நேரங்களில், ஆன்மிகத்தை விட்டுவிட்டு வருமாறு உறவுகள் வலியுறுத்துகின்றன. எனவே, இரண்டில் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவதென மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள். இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், ஆன்மிகத்திற்காக உறவுகளைத் துறந்தவர்களைவிட உறவுகளுக்காக ஆன்மிகத்தைத் துறந்தவர்கள்தான் அதிகம். உண்மையில் இவையிரண்டும் ஒன்றுடனொன்று முரண்பட்டவையே அல்ல. உங்கள் உள்நிலையில் நிகழும் ஒன்று, யாருடனாவது அல்லது எதனுடனாவது உங்களுக்கிருக்கும் உறவுடன் முரண்படப் போவதேயில்லை. ஆனால், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென ஓர் உறவு நிபந்தனை விதிக்கும்போதுதான் அது தடையாக மாறுகிறது. இது பல இடங்களில் நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஒருவர் தியானம் செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் அவருடைய குடும்பம் மகிழ்ச்சியடைகிறது. அவரது நிபந்தனைகள் குறைகின்றன. அமைதியாக இருக்கிறார். முன்பைவிட நன்றாக செயல்படுகிறார். ஆனால், அந்த மனிதர் ஆன்மிகத்தில் இன்னும் ஆழமாக செல்லச் செல்ல, அவரால் கண்மூடி அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பது தெரியும்போது, சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.

இதே மனிதர் வேறு ஒருவர் பின்னால் போனால் அவருடைய மனைவிக்கு அந்தச் சூழலை எப்படி கையாள்வதென்று தெரியும். ஆனால், ஒரு மனிதர் அவராகவே மகிழ்ச்சியாக இருக்கும்போது மற்றவர்களின் பாதுகாப்பு உணர்ச்சி கேள்விக்குள்ளாகிறது. அதை ஓர் அபாயமாகவே அவர்கள் கருதுகிறார்கள். “இனிமேல் இந்த வீட்டில் தியானம் செய்யக்கூடாது” என்கிறார்கள். அந்த மனிதர், “சரி! நான் அமைதியாக அமர்ந்திருக்கிறேன்” என்கிறார். உடனே “அதெல்லாம் முடியாது. ஒன்று, ஏதாவது வேலை செய்யுங்கள், அல்லது என்னுடன் பேசுங்கள்” என்கிறார்கள். இப்படி எளிய விஷயங்களுக்குக்கூட வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கும்போது விசித்திரமாகத் தோன்றும். சிலர் முட்டாள்தனமாக எதையாவது செய்யும்போது பிரிவு நேரிடும்.

என்னைச் சுற்றியிருக்கும் பலரோடும் தீவிரமும் ஈடுபாடும் மிக்க உறவுகள் எனக்கு உண்டு. அவை பல்வேறு தளங்களிலும் பரிமாணங்களிலும் செயல்படுகின்றன. ஆனால், என் ஆன்மிகத் தன்மையுடன் அவை எவ்விதத்திலும் முரண்படுவதில்லை. ஏனென்றால், அவை இரண்டுமே வாழ்வின் வெவ்வேறு அம்சங்கள். உறவுகள் என்பவை வெளியுலகம் சார்ந்தவை என்பதால், அவற்றை முழுத் திறமையுடன் நீங்கள் கையாள வேண்டும். நீங்கள் ஆன்மிகப் பாதையில் போனாலும், உங்கள் வாழ்க்கைத் துணைவர் ஆன்மிகப் பாதையில் போனாலும் அதன் காரணமாக உங்கள் வாழ்வில் எவ்வித முரண்பாடும் ஏற்படக் கூடாது. ஆன்மிகத்தில் ஈடுபடுவதில் ஒரு விஷயம் என்னவென்றால், உங்களுக்குள் ஏதோ ஒன்றின் சுவையை உணர்ந்துவிட்டீர்களென்றால், அதுவே உங்கள் வாழ்வின் மையமாக மாறிவிடுகிறது. ஆனால், உங்களுடன் உறவில் இருக்கும் ஒருவர், தானே உங்கள் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அப்படி இல்லையெனும்போது பாதுகாப்பற்ற உணர்வு அவர்களைத் தொற்றிக்கொள்கிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018