மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: வேளாண் சீர்திருத்தமும் யதார்த்தமும்!

சிறப்புக் கட்டுரை: வேளாண் சீர்திருத்தமும் யதார்த்தமும்!

2017ஆம் ஆண்டில் இந்திய வேளாண் துறையில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான போராட்டங்களை விவசாயிகள் நடத்திவிட்டனர். இதையடுத்து மூன்று மாநிலங்களில் வேளாண் கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது.

2016-17ஆம் நிதியாண்டில் உணவுப் பொருள் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக உற்பத்திப் பொருள்களின் விலை சென்றதால் விவசாயிகளுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தொடர் வறட்சியால் கிராமப்புற வருவாய் குறைந்துள்ளது. சில பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து அறுவடையைப் பாதித்தது. இதனால் உணவுப் பொருள்கள் விலை உயர்ந்தது. இதுபோன்ற பல்வேறு காரணிகளும் ஒன்றுசேர்ந்து அரசின் கவனத்தை ஈர்த்தது. அரசாங்கமும் விவசாயத் துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாகவே டபிள்யூ.டி.ஓ. கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டில் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான நடவடிக்கைகள்

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க புதிய மூலோபாய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் அவசியமாகும். வெறுமனே உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே எந்தவகையிலும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்காது.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் 7 மூலோபாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைகள் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருவாயை ஏற்படுத்தித் தருவோமென்று அரசு கூறுகிறது. இதன்படி, ‘பாசன வசதியை மேம்படுத்துதல், உற்பத்தியை அதிகரித்தல், சாகுபடிக்கான செலவைக் குறைத்தல், மண் நல அட்டைகளைப் பயன்படுத்தி உரங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை சரியான அளவில் பயன்படுத்துதல்’ போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதேபோல கிடங்குகள் அமைக்க அதிகளவில் முதலீடு செய்தல், குளிர்பதன வசதிகளை அதிகரித்து உற்பத்திப் பொருள்களைப் பாதுகாத்தல், உணவு பதப்படுத்துதலை மேம்படுத்தல், தேசிய வேளாண் சந்தையை உருவாக்குதல், மின்னணு வேளாண் சந்தைகளை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள வேளாண் சந்தைகளை அதனுடன் இணைத்தல், குறைந்த கட்டணத்தில் புதிய பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்துதல், கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல் போன்றவையும் இந்தத் திட்டத்தின் அங்கங்களாகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் விவசாயிகளின் செலவு நடவடிக்கைகளைப் பாதுகாக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தருதல், மகசூலை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறிந்து பயன்படுத்துதல், மாற்று வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையில் விவசாயிகளை ஈடுபடச் செய்தல் ஆகியவை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும்.

இறக்குமதி வரி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த ஆண்டு பல்வேறு வேளாண் பொருள்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. சென்னா, மசூர் ஆகிய பருப்பு வகைகளுக்கு 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த இரண்டு வகை பருப்புகளும் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. “இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னா மற்றும் மசூர் வகை பருப்புகளுக்கு 30 சதவிகிதம் இறக்குமதி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தியில் 40 சதவிகிதப் பங்கை சென்னா கொண்டுள்ளது. அண்மையில் வேளாண் பொருள்களின் விலை வீழ்ச்சியால் சென்னா குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விற்பனையானது. வேளாண் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ‘டிசம்பர் முதல் வார கணக்குப்படி ஒவ்வொரு வருடமும் சென்னா சாகுபடி 14 சதவிகிதம் அதிகரித்துவருகிறது. மொத்த விற்பனையில் சென்னா குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 வரை சரிந்துள்ளது. முன்னதாக மே - ஜூன் பருவத்தில் சென்னா விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 ஆக இருந்தது’ என்பது தெரியவருகிறது.

நவம்பரில் மத்திய அரசு தாவர எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்தியது. குறிப்பாக பாமாயில், சோயாபீன் போன்ற எண்ணெய் வகைகளின் இறக்குமதி உயர்த்தப்பட்டது. அதேபோல மஞ்சள் பட்டாணியின் இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது.

நலத்திட்டங்களை மேம்படுத்துதல்

மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை வேளாண் நலத்திட்டங்களில் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகளை இணைப்பதும் அதிகரித்து வருகிறது.

பயிர் காப்பீட்டுத் திட்டமான ‘ஃபசல் பீமா யோஜனா’ திட்டத்தில் பயிர் பரப்பின் காப்பீடு 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. நீர் பாசனத் திட்டத்துக்கான நிதியும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.40,000 ஆக அறிவிக்கப்பட்டது. நீர் பாசனத் திட்டங்களை அதிகரிக்கும் வகையில் நபார்டு வங்கியின் மூலம் இந்த நிதி வழங்கப்பட்டது.

தேசிய மின்னணு வேளாண் சந்தையை விரிவாக்கம் செய்து சந்தைப்படுத்தலை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல பால் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு நிதி போன்றவற்றுக்காகவும் கடந்த மூன்றாண்டுகளில் நபார்டு மூலம் ரூ.8,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. 100 சதவிகித அந்நிய முதலீட்டு வர்த்தகத்தை அனுமதித்துள்ளது. இதில் இ-காமர்ஸ் துறையிலும் 100 சதவிகித அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் உற்பத்தி அல்லது இந்தியாவில் தயாரித்தல் ஆகியவற்றுக்குத் தூண்டுகிறது. மேலும், இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் முதலீடும் அதிகரிக்கிறது.

குறைந்தபட்ச ஆதார விலை

ராபி மற்றும் காரிஃப் இரண்டு பருவங்களிலும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாக தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “கொள்முதல் மையங்களை அதிகரித்து விவசாயிகளிடமிருந்து அதிகளவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “அதிகளவிலான கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றும் ராம் விலாஸ் பஸ்வான் அந்தச் செய்தியில் கூறியுள்ளார். வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் பத்திரிகைகளிடம் கூறுகையில், “விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவோம். சில மாநில அரசுகள் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான போதிய பணிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு அந்த அரசுகளை வலியுறுத்தி வருகிறது” என்றார்.

நிதி ஆயோக் திட்டங்கள்

மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் வேளாண் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி சில கொள்கைகளை வகுத்துள்ளது. குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல் போன்ற திட்டங்களை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளது.

உற்பத்தியை அதிகரித்தல், கால்நடைகள் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுதல், வேளாண் சார்ந்த மற்ற தொழில்களை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களைத்தான் நிதி ஆயோக்கும் பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு வேளாண் துறைக்கான நிதியையும் நடப்பு நிதியாண்டில் குறைத்துள்ளது. இருப்பினும் வரும் பட்ஜெட்டில் (2018) கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் வேளாண் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “அடுத்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் பெரும் போராட்டத்துக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலமும், தேர்தல் வாக்குறுதியாக பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் விவசாயக் கடனை 2017ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது.

2017ஆம் ஆண்டில் விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க மத்திய அரசு மேற்கண்ட பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுவது பெரும்பாலும் விவசாயிகளின் பாதிப்புக்கே வழிவகுத்துள்ளது. மாறாக அவர்களின் முடிவுக்கு எந்தவிதமான பலனையும் மத்திய அரசின் பல திட்டங்கள் அளிக்கவில்லை. குறிப்பாக உற்பத்தி அதிகரிப்பு விவசாயிகளை மேலும் விலை வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது. உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யப் போதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய அரசு எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. போதிய சந்தை வாய்ப்பு இருந்திருந்தால் விலை வீழ்ச்சிக்கு வாய்ப்பற்று போயிருக்கும்.

அடுத்ததாக இரண்டாண்டு வறட்சிக்குப் பின்னர் உற்பத்தியில் சாதித்திருந்த விவசாயிகளுக்கு 2016ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை ரொக்கப் பணப்புழக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. கிராமப்புற ஏழை விவசாயிகள் காசோலைகளை வங்கிகளுக்குச் சென்று ரொக்கமாக மாற்றுவது எளிதான காரியமல்ல. மேலும் ஒருமுறை காசோலைகள் மூலம் ரொக்கப்பணத்தை பெற இரண்டு, மூன்று வாரங்கள் வரை ஆனது. இது விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்தது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தைப் பெருமையாகக் கூற முயலும் மத்திய அரசு அதன் பயனை யார் அனுபவித்தார்கள் என்று பேச மறுப்பதேன்? விவசாயிகளுக்குப் புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் இழப்பு ஏற்பட்டால் அவர்களை அதன் இழப்பிலிருந்து மீட்க உருவாக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கார்பரேட் நிறுவனங்களே கோடிகளில் லாபமீட்டின. கடந்த பருவத்தில் இழப்பீடு கோரியவர்களுக்கே இன்னமும் முழுவதுமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் பயனடைகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவ்வாறு 2017ஆம் ஆண்டில் பல்வேறு சீர்திருத்தங்களை வேளாண் துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அவற்றால் விவசாயிகளுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ராபி பருவத்தின் அறுவடைகள் தொடங்கியிருக்கிற இந்தச் சூழலில் பருத்திக்கும் உருளைக்கிழங்குக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என்று இம்முறையும் விவசாயிகள் வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். வெங்காயத்தின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. வேளாண் வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை இந்தப் பருவத்திலும் தொடர்கிறது. மத்திய அரசின் சீர்திருத்தம் பயன்பட்டிருந்தால், நடப்புப் பருவத்திலும் விலைவீழ்ச்சி தொடர்ந்திருக்குமா?

நன்றி: மணி கன்ட்ரோல்

-பிரகாசு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 13 ஜன 2018