உணவுப் பொருள்கள் விலை சரிவு!

டிசம்பர் மாதத்தில் சர்வதேச உணவுப் பொருள்கள் விலை சரிந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் வியாழக்கிழமை (ஜனவரி 11) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருள்கள் விலை குறித்த உணவுப் பொருள் விலை குறியீட்டு தொகுப்புப் பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி டிசம்பர் மாதத்துக்கான விலைப் பட்டியலில் தானியங்கள், எண்ணெய் வித்துகள், பால் பொருள்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலை தோராயமாக 169.8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது நவம்பர் மாதத்தைவிட 3.3 சதவிகிதம் குறைவாகும்.
2017ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் இதன் மதிப்பு தோராயமாக 174.6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது 2016ஆம் ஆண்டை விட 8.2 சதவிகிதம் கூடுதலாகும். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2017ஆம் ஆண்டுதான் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. இதனோடு ஒப்பிடும்போது 2011ஆம் ஆண்டு சர்வதேசச் சந்தைகளில் 24 சதவிகிதம் குறைவான விலைக்கு உணவுப் பொருள்கள் விற்பனையானது” என்று கூறப்பட்டுள்ளது.