ஆவணங்களை சமர்ப்பித்த அப்பல்லோ!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, டிசம்பர் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் ஜெ அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக், முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கிருஷ்ணப் பிரியா, மருத்துவர் சிவக்குமார், ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து விளக்கமளிக்க அவகாசம் வேண்டுமென அப்பல்லோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து 12ஆம் தேதிக்குள் (இன்று) விளக்கம் அளிக்க வேண்டுமென விசாரணை ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 12) விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய அப்பல்லோ நிர்வாகம் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.