மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

கருணாநிதியின் மௌனமும் நாத்திகம் பேசும்!

கருணாநிதியின் மௌனமும் நாத்திகம் பேசும்!

ஹெச்.ராஜாவுக்கு கனிமொழி பதில்

உலக நாத்திகர் மாநாட்டில் அண்மையில் பேசிய திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, ‘திருப்பதி கோயில் உண்டியலுக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு?’ என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதைக் கண்டித்துப் பேசிய பாஜகவின் ஹெச்.ராஜா, “கனிமொழி திருப்பதி மேல் கை வைத்துவிட்டார். இப்படித்தான் அவரது தந்தை கருணாநிதி தொடர்ந்து கடவுளைத் தாக்கிப் பேசிவந்தார். அதனால்தான் இப்போது அவரால் பேசவே முடியவில்லை” என்று கடுமையாகத் தாக்கினார்.

இந்த நிலையில் கவிஞர் ஆரூர் புதியவன் எழுதிய, ‘சொற்களால் ஒரு சுதந்திரப் போர்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நேற்று (ஜனவரி 11) இரவு பேசினார் கனிமொழி எம்.பி.

அப்போது, “கடவுளை மறுத்துப் பேசியதால்தான் தலைவர் இப்போது பேச முடியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். தலைவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருப்பதால் இப்போது பேச முடியவில்லை. மெல்ல பேசுகிறார். முடியவில்லை என்றால் சைகைகளால் செய்துகாட்டுகிறார். அமைதி அவரைச் சுற்றியிருக்கிறது.

தலைவருக்குப் பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக்கொள்ளக் கூடியவர் நித்யா. அவருக்குப் பக்தி உண்டு. எல்லா கோயிலுக்கும் போய் வருவார். அதனால் சில நேரம் தலைவர் உடல்நிலை சரியாக வேண்டும் என்ற ஆவலில் தலைவரின் நெற்றியில் விபூதியை இட்டுவிடுவார். தலைவர் அடுத்த நிமிடம் கையை மெல்ல தூக்கி அந்த விபூதியை அழித்துவிடுவார். நித்யா சிரிப்பதா, வருத்தப்படுவதா என்று தெரியாமல், ‘எது தெரியுதோ இல்லையோ, எவ்வளவு உடம்பு சரியில்லை என்றாலும் இதில் மாத்திரம் தெளிவாக இருக்கிறாரே’ என்று சொல்வார். நான் நித்யாவிடம், ‘ஏன் இப்படி பண்றீங்க. அவர் நல்லா இருந்தா இந்நேரம் நீங்க பண்ற வேலைக்கு அடித்திருப்பார்’ என்று சொல்லுவேன்.

இன்னும் சில பேர், ‘என் அம்மா கோயிலுக்குப் போகிறாரே’ என்று சொல்கிறார்கள். ஆமாம். என் அம்மா கோயிலுக்குப் போற உரிமை அவருக்கு இருக்கிறது. அதற்காகவும் நான் போராடுவேன். தலைவர் தொடர்ந்து சொல்லியிருக்கிறார். இருந்தாலும் என் அம்மா கோயிலுக்குப் போகிறார். இந்தச் சம்பவம் பற்றி என் அம்மா என்னிடம், ‘இந்தச் சூழலிலும் இப்படி இருந்தா என்ன பண்றது?’ என்று கேட்டார்.

நான், ‘வா அவரிடமே கேட்போம்’ என்று சொல்லி தலைவரிடம் ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா?’ என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. தலையை இருபக்கமும் ஆட்டி ‘இல்லை இல்லை’ என்றார். ஆம்... அந்த மனிதருடைய மௌனமும் நாத்திகம் பேசும். எனக்கு அகம்பாவம் என்கிறார்கள். ஆம். அவருக்கு மகளாகப் பிறந்த அகம்பாவத்தில்தான் பேசுகிறேன். நாங்கள் நாத்திகம் பேசுவதை நிறுத்தப் போவதில்லை” என்று பேசினார் கனிமொழி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018