மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

விமர்சனம்: குலேபகாவலி!

விமர்சனம்: குலேபகாவலி!

- சிவா

பத்துக்கும் மேற்பட்ட கதைக்கு முக்கியமான நடிகர்களைப் படத்தில் வைக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய சிரமங்கள் அதிகம். சரியான இடத்தில் ஒவ்வொருவரின் கதையையும் முடிச்சிடுவது, அதற்கு சரியான காரணங்களைத் தரும் செயலை மிகவும் அசால்ட்டாக கடந்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.

பிரபு தேவா, மன்சூர் அலி கான், யோகி பாபு ஆகியோர் சிலை திருடி விற்கும் கடத்தல் கும்பல். நடிகை ரேவதி கார் திருடுவதில் கில்லாடி. அழகைக் காட்டி ஆண்களை மயக்கி நகை, பணம் போன்றவற்றைத் திருடுபவர் ஹன்சிகா. இவர்களையெல்லாம் இணைக்க மெக்சிகோவிலிருந்து வருகிறார் மதுசூதனன்.

படத்தின் தொடக்கத்திலேயே வெள்ளைக்காரர்களிடமிருந்து திருடப்படும் வைரங்களை குலேபகாவலி கோயிலில் மதுசூதனனின் முப்பாட்டன் பெட்டியில் ஒளித்துவைப்பதைக் காட்டுகிறார்கள். அதைத் தேடிப்பிடிக்க குலேபகாவலி கோயிலுக்குச் செல்லும்போது அங்கு பிரபு தேவா சிலை திருடிக்கொண்டிருக்கிறார். அப்போது அந்தப் பக்கமாக வரும் ஹன்சிகா, ஊருக்காக நிர்வாண பூஜை செய்பவரைப் பார்த்துவிட்டு களேபரம் செய்ய ஊர் கூடி ஹன்சிகாவையே நிர்வாண பூஜை செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறது. முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிட்ட ஹன்சிகாவைக் காப்பாற்றி பிரபு தேவா எஸ்கேப் ஆக, இந்தக் காதலை ஆதாரமாக வைத்து இவர்களைக்கொண்டே அந்தப் பெட்டியை அபேஸ் செய்ய முயற்சிக்கிறார்கள் மதுசூதனன் மற்றும் அவரது மச்சான் ஆனந்த்ராஜ். அதற்கு தங்களது அடியாள் முனிஷ்காந்த்தையும் அவர்களுடன் அனுப்புகிறார்கள். அப்போது அந்த வழியே காரோட்டிவரும் ரேவதியிடம் இவர்கள் சிக்க, அவரும் இவர்களுடன் சேர்ந்து பெட்டியைத் தேடிச் செல்கிறார். கடத்திய சிலையைக் கொண்டுவராததால் பிரபு தேவாவை மன்சூர் துரத்த, தங்களிடமிருந்து கார் திருடியதற்காக சத்யன் மற்றும் மொட்டை ராஜேந்திரனும் இவர்களைத் துரத்த படமும், நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஒருவரைக்கூட நல்லவராகக் காட்டக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு மட்டும் எவ்வித திருட்டுப்பட்டமும் கட்டப்படவில்லை. மற்றபடி போலீஸாக வரும் சத்யன்கூட களங்கமானவரே. பஞ்சயத்து தலைவராக வரும் வேல ராமமூர்த்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. மொத்தத்தில் படம் ஒரு முழு கெட்ட பசங்க நடித்திருக்கும், ஆபாசமில்லாத நல்ல திரைப்படம்.

ஹீரோ - ஹீரோயின் யாராக இருந்தாலும் ரேவதி தான் மாஸ்டர் பீஸ். இத்தனை வித்தியாசமான கேரக்டருக்கு ஓகே சொல்ல மிகப்பெரிய தைரியம் இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகியிருந்தாலும், விளைவு விரும்பத்தகாததாக இருந்திருக்கும். ஆனால், சரியான ஆர்.பி.எம்-இல் கிக்கரை அடித்து வண்டியை டாப் கியரில் பறக்கவிட்டிருக்கிறார். அவரது திருட்டு ஸ்பெஷாலிட்டிக்காக மாற்றி மாற்றி அவர் நடிக்கும்போதும், மாஷா என்ற பெயரை மாஸாக சொல்லும்போதும், ஒரு காலத்துல டாப் ஹீரோயின், அப்புறம்தான் இதெல்லாம் என்று உணர்த்துகிறது.

படத்தில் குறை என்றால் முதல் பாதியில் விழும் அதிக ஸ்பீடு பிரேக்கர்கள். எப்பதான் குலேபகாவலிக்குக் கிளம்புவீங்க என்று கேட்க வைக்கிறார்கள். அந்தச் சமயத்தை சத்யன் காமடியை வைத்து அடைத்துவிடலாம் என நினைத்தது சத்திய சோதனை. ஆனந்த்ராஜுக்கு இன்னும் வில்லத்தனம் கூட்டியிருக்கலாம். அவ்வப்போது மாறும் அவரது முகம், சில வருடங்களுக்கு முந்தைய மாஸ்டர் வில்லனைக் கண்முன் காட்டியது. பாடல்களில் விவக் - மெர்வின் தப்பித்துவிட்டார். பின்னணி இசையில் இன்னும் உழைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளராக கிராஃபிக்ஸுக்கு ஏற்ப வேலை செய்திருக்கிறார் ஆர்.எஸ்.ஆனந்தகுமார்.

தற்போதைய பிளாக் காமெடி படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கெல்லாம் முன்னோடி பிரபு தேவாதான். அவர் இந்தப் படத்தில் அதிகம் எடுபடாதது வருத்தமே. நான்கு பாடலுக்கும், சில சண்டைக் காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். மற்ற இடங்களிலெல்லாம் யோகி பாபு, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் ஆகியோர் அடித்துச் செல்கின்றனர். ரொமான்ஸ் காட்சியிலும் ஹன்சிகா ஓவர்டேக் செய்துவிடுகிறார்.

ஹன்சிகா எடையைக் குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக மாறியிருப்பதன் தாக்கம் இந்தப் படத்தில் அதிகமாகவே தெரிகிறது. மாடர்ன் உடையில் மிரட்டுகிறார். ஹன்சிகாவைக் கொண்டு நிர்வாண பூஜை செய்ய வேண்டும் எனச் சொல்லும்போது, பின் பக்கத்திலிருந்து சவுண்டு கேட்கிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 12 ஜன 2018