மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 2

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 2

அ. குமரேசன்

வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பர்யக் கலைகளாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருப்பவை எவை? கர்னாடக சங்கீதமும் பரதமும் அவை போன்ற வேறு பல மேட்டுக்குடி கலைகளும் இந்தியாவின் பாரம்பர்யக் கலைகள்தான். ஆனால், அவை மட்டும்தான் இந்தியக் கலைகளா? இந்தியா பற்றிய கற்பனையை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் இடத்தில் இருந்த அதிகார வர்க்க அலுவலகங்களின் இண்டு இடுக்குகளிலும் நிரம்பியிருந்த சாதிப் புத்தி இதற்குக் காரணமில்லையா? வெளிநாடுகளிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணிகள் அதிகாரபூர்வ மேடை நிகழ்ச்சிகளைக் கண்டு முடித்து ஊருக்குள்ளேயும் ஊருக்கு வெளியேயும் சுற்றி வருகிறபோது பறையாட்டங்களையும் கரகங்களையும் தெருக்கூத்துகளையும் கிராமியப் பாட்டு நிகழ்ச்சிகளையும் கண்டு வியந்து, “இதெல்லாம் இருப்பது பற்றி எங்களுக்குச் சொல்லப்படவே இல்லையே” என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லாமல்விட்டதற்கு யார் பொறுப்பு?

இந்தக் கலைகளுக்கும் இடம் உண்டா?

நான் செய்தியாளராக ஊர் சுற்றி வந்த நாளொன்றில், அகில இந்திய வானொலியின் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு வந்திருந்ததால் சென்றிருந்தேன். வானொலி நிறுவனத்தின் ஒரு விழாவையொட்டியும், டிசம்பர் சீசனையொட்டியும், பல ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட, இந்தியாவின் பாரம்பர்ய இசையாகிய கர்னாடக சங்கீதத் தொகுப்புகள் ஒலிப்பேழைகளாக வெளியிடப்பட இருப்பதாக, தலைமை அதிகாரி மகிழ்ச்சியோடு அறிவித்தார். எத்தனை ஒலிப்பேழைகள், யார் யார் பாடியிருக்கிறார்கள் என்ற தகவல்களைச் சக செய்தியாளர்கள் கேட்டுக் குறித்துக்கொண்டார்கள்.

என்னுடைய குதர்க்கப் புத்தி, “இந்தியாவின் பாரம்பர்ய இசை வடிவங்களில் ஒன்றாகிய தமிழக நாட்டுப்புறப் பாடல்களையும் இசையையும் பதிவு செய்திருக்கிறீர்களா? அந்தத் தொகுப்புகள் வெளியிடப்படுமா?” என்று கேட்க வைத்தது. முதலில் ஏதேதோ சொன்ன அந்த அதிகாரி பின்னர், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஒலிபரப்பப்படுகின்றன என்பதாக ஒரு பதிலை அளித்தார். அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு வெளியீடு பற்றி எதுவும் சொல்லவில்லை.

அதிகாரிகள் மட்டுமல்லாமல், சில செய்தியாளர்களும்கூட, அந்த இடத்தில் தேவையற்ற பிரச்னையைக் கிளப்புகிறவனாக என்னைப் பார்த்தார்கள். வானொலி நிறுவன அணுகுமுறையில் மட்டுமல்ல, மறுநாள் பத்திரிகைகளில் (எங்கள் நாளேடு தவிர்த்து) வந்த செய்திகளில் இந்தக் கேள்வியும் பதிலும் இடம்பெறவில்லை என்பதிலும் மறைந்திருப்பது சாதியமே அல்லவா?

புனிதமானவையாகப் போற்றப்படும் கர்னாடக சங்கீதமும் பரதமும் குப்பங்களுக்குப் போனதுண்டா? துடித்தெழுந்து உழைத்திடத் தெம்பூட்டுவதற்கு மாறாக, ஓய்ந்து சாய்ந்து ரசனைத் தலையணையில் புதைந்திட வைக்கும் சங்கீதத்தைக் குப்பத்து மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள் என்பது வேறு விவாதம். சினிமா இசையமைப்பாளர்கள்தான், கர்னாடக சங்கீதத்தை இலகுவாக்கி எளிய மக்களும் ரசிக்கிற வடிவில் கொடுக்கத் தொடங்கினார்கள். மவுனப்படக் காலம் முடிந்து பேசும்படக் காலம் தொடங்கியபின், இன்றளவும் பாடும் படமாகவும் இருக்கும் தமிழ் சினிமாவில் இப்படி இசையை எளிய மக்களுக்கானதாகவும் மாற்றிய இசைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. நாட்டுப்புற இசையை மேலடுக்கு மக்களுக்கானதாகவும் மாற்றிய அருஞ்செயலையும் அவர்கள் செய்தார்கள்.

திருதராட்டிர ஆலிங்கனமா?

பல இசைவாணர்கள் இவ்வாறு பங்களித்திருக்கிறார்கள் என்றாலும், இப்போதைய பேசுபொருளுக்குப் பொருத்தமானவராகிறவர், இரு தரப்பு இசையையும் இரு தரப்பு மக்களுக்கும் கடத்திக் கொடுத்தவரான இளையராஜா. சமூக அடுக்கின் எந்தத் தட்டிலிருந்து வந்தவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தமிழ் சினிமா இசை ஒரே மாதிரியாக சலிப்பூட்டிய பின்னணியில் இந்திப் படப் பாடல்கள் (பொருள் புரியாமலே) இங்கே பரவி ஒலிப்பதற்கு வழிவிட்டிருந்தார்கள் ரசிகர்கள். அவர்களை மறுபடியும் தமிழ் சினிமாப் பாடல்களின் பக்கம் இசை வலைவீசி இழுத்ததோடு, இந்த இசை வட மாநிலத் திரைகளுக்கும் செல்ல வைத்தவர் அவர். ஆனால் அவருக்கான சங்கீத உலக அங்கீகாரம் எப்போது கிடைத்தது? ஒரு ‘ஜனனி ஜனனி, ஜகம் நீ ஜகம் நீ’ பாடல் இசையை வழங்கிய பிறகுதான். அப்புறம் அவர் திருவாசகம் அது இது என்று ஆன்மிக ஞானியாய் அடங்கிப்போனது இசையுலக சோகம். ஒருவேளை அது அவருடைய அடையாளத்தை மாற்றிய ஒரு வகையான திருதராட்டிர ஆலிங்கனமோ என்னவோ.

இன்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கர்னாடக சங்கீதத்தைக் குப்பத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். சங்கீத மேடைப் பாகுபாடுகளையும், நாட்டில் மூர்க்கமாகப் பாய்ந்துகொண்டிருக்கிற மதவெறி நாராசத்தையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். அவருடன் ஒத்த சிந்தனையுள்ள வேறு சில இசைக் கலைஞர்களும் இருக்கக்கூடும். குப்பத்து இசையைக் கர்னாடக இசை வட்டத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியையும் மேற்கொள்கிறார்.

குப்பத்து இசை எப்போது மியூசிக் அகாடமியில் சம மரியாதையோடு அரங்கேறும் என்ற கேள்விக்கும் பதில் வர வேண்டும். மியூசிக் அகாடமி போன்ற அரங்குகளுக்கு கானா உள்ளிட்ட எளியோர் இசை வர வேண்டும் என்பது ஏதோ அதுதான் அங்கீகாரம் என்பதற்காக அல்ல. காதல், கலகலப்பு, வாழ்க்கை நிலை, சாதிப் பாகுபாடு, சமூக அரசியல் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்க வைக்கிற அந்த இசை அந்த அரங்குகளின் வாடிக்கை ரசனையாளர்களது செவிகளிலும் ஒலிக்கட்டும் என்பதற்காக.

பிரச்னை என்னவென்றால், இப்படியான சாதிப் பாகுபாடுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறவர்கள், அதை யாராவது சுட்டிக்காட்டி எதிர்வினையாற்றுகிறபோது மட்டும், “ஏன் இதை சாதிப் பிரச்னையாக்குகிறீர்கள்?” என்று கேட்பதுதான். அரசியல், சமூகம், கோவில், வழிபாடு, சடங்கு, கல்வி, தொழில், சினிமா, இசை உள்ளிட்ட எல்லாக் களங்களிலும் சாதிப் பாகுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் மீது “சாதிப் பிரச்னையாக்குகிறார்கள்” என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஊருக்குள் சுற்றும் தேர் சேரிக்குள் வராமலே போவதில் உள்ள சாதிய ஒதுக்கலைத் தட்டிக் கேட்க மாட்டார்கள். தட்டிக் கேட்க யாராவது எழுந்திருக்கிறபோது மட்டும், “சாதி அரசியல் பண்ணுகிறார்கள்” என்ற சகதி வீசப்படும்.

தட்டிக்கேட்கும் முயற்சி

சுட்டிக்காட்டுகிற, தட்டிக்கேட்கிற ஒரு முயற்சிதான் இயக்குநர் பா.ரஞ்சித் மேற்கொண்டுள்ள சாதி மறுப்புக்கான கூட்டு (காஸ்ட்லெஸ் கலெக்டிவ்). மறைபொருளாக இல்லாமல், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர், “கலை அரசியல் பேச வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி” என்று வெளிப்படையாக அறிவித்தார். அது சாதியத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயமடைகிற அரசியல் அல்ல. எதிர்கால வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படலாம் என்ற அபாயநிலையைப் பொருட்படுத்தாத சாதிய எதிர்ப்பு அரசியல்.

அவர் இதைத் திடுதிப்பென்று செய்துவிடவில்லை. ஏற்கெனவே, திரையுலகப் பிரச்னைகள் தொடர்பான மேடைகளில், “சாதிகளும் பாகுபாடுகளும் இருக்கிற வரையில் எப்படி இனமாக ஒன்று சேர முடியும்” என்று கேட்டவர்தான். தனது படங்களில் நுட்பமாக சாதியத்தைத் தொட்டுக்காட்டியவர்தான். சாதிய எதிர்ப்பு என்பது சினிமாக் காட்சிகளோடு நின்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, திரைக்கு வெளியேயும் அதில் ஈடுபடுகிறவர்தான். ‘நீட்’ கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட அனிதா நினைவாக, கல்விக் களத்தின் சாதியம் பற்றிய ஒரு மாநாட்டை நீலம் பண்பாட்டு மையம் நடத்தியது அந்த ஈடுபாட்டிலிருந்து வந்த செயல் திட்டம்தான். சென்னையின் லலித் கலா அகாடமி வளாகத்தில், மலக் குழியில் இறக்கிவிடப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை பற்றிய புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததும், நிறைவு நாளின் மாலைப்பொழுதில் அதே வளாகத்துக்குள் முதன்முறையாக கானா இளைஞர்களைப் பாடி ஆடச் செய்ததும் அதே ஈடுபாட்டின் தொடர்ச்சிதான்.

‘மெட்ராஸ்’ படம் வந்தபோது அவரை நான் பேட்டி கண்டேன். “இன்றைய தமிழ் சினிமாச் சூழலில், எனது அறிமுக நிலையில், இப்படி நுட்பமான முறையில்தான் சாதியம் பற்றிப் பேச முடிகிறது. வணிக அடிப்படையில் வெற்றிகரமாகக் காலூன்றிவிட்டால், அதன் பிறகு வெளிப்படையாகவே பேச முடியும்” என்று சொன்னார். சொன்னபடி இப்போது நடந்துகொள்கிறார்.

ஒருவேளை அதுதான் சிலருக்குச் செரிமானச் சிக்கலை ஏற்படுத்துகிறதோ என்னவோ. எளிய பல கலைஞர்களில் ஒருவராக அவர் இக்கருத்துகளைப் பேசுவாரானால், ஓர் அறிவுயிரியின் கருத்தாகக் கரைந்துபோயிருக்கும். அவரோ ஒரு வலிமையை வளர்த்துக்கொண்டு வெளிப்படுத்துகிறார். பெரிய அளவில் முதலீடும் தேவைப்படுகிற திட்டங்களைச் செய்ய முடிகிற இடத்தில் இருக்கிறார் என்பதும் கூடுதல் வெப்பப் பெருமூச்சுகளுக்குக் காரணமாகிறது போலும்.

சாதிச் சகதி துடைத்தெறியப்பட வேண்டும் என்ற அக்கறையோடு, காஸ்ட்லெஸ் கலெக்டிவ் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கானாவுக்கே உரிய உற்சாகம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்திய அந்த நிகழ்ச்சி, சென்னையைப் பற்றி, வட சென்னையைப் பற்றி, மக்களின் பாடுகள் பற்றி, மீனவக் கொலைகளும் ஆணவக் கொலைகளும் மலிந்துவிட்டது பற்றியெல்லாம் பாடியது. சாதியத்தின் மூலம் பெண்ணடிமைத்தனமும் இறுக்கமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற கவனத்தோடு, கானாவில் கலந்துவிட்ட மாதர்தமை இழிவு செய்யும் பாடல்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஒரு பெண்ணின் பங்கேற்புடன் காதல் பாடல்களும் பாடப்பட்டன. சாதி வரப்பைத் தாண்டக்கூடியவையல்லவா காதல் கால்கள்.

கானாவின் ஒரு முக்கிய அடையாளம் பாடுவோரும் பார்வையாளரும் சேர்ந்து ஆடுவதுதான். இந்த மேடை கலைஞர்களையும் பார்வையாளர்களையும் பிரிக்கிறதோ என்ற உறுத்தல் ஏற்பட்ட நொடியில், மேடையிலிருந்து மும்பை பாடகர் இப்படிக் கேட்டார்: “நாங்கள் மட்டும்தான் ஆட வேண்டுமா? சென்னையே ஆட வேண்டாமா? நீங்கள் ஆட மாட்டீர்களா?” அப்புறம் என்ன, அவையோரில் குறைந்தது தலையை அல்லது இடுப்பை அல்லது கால்களை ஆட்டாமல் உட்கார்ந்திருந்தவர்கள் எவருமில்லை.

சாதிய ஒழிப்பை நோக்கிய பயணத்தில் தலித் விடுதலைக் குழுக்களும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் ஜிக்னேஷ் மேவானி முதலான செயல்பாட்டாளர்களும் களமிறங்கி மேற்கொண்டுள்ள போராட்ட வரலாறு கலைக்களத்திலும் எழுதப்படுகிறது. அக்கறை உள்ளோர் அந்த வரலாற்றின் பக்கங்களாக இணைய வேண்டிய காலம் இது. அதற்கான அணிவகுப்பு இசை அதிர்ந்து பரவட்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018