மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

தற்காலிக வா'பஸ்'!

தற்காலிக வா'பஸ்'!

ஒருவாரத்துக்கும் மேலாக தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சென்னை உயர் நீதிமன்றத்தின் முயற்சியால் முடிவை நோக்கிச் செல்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும், தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புங்கள் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர் தொழிற்சங்கத்தினர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இருப்பினும் இதற்கு ஒரு சுமூக தீர்வு ஏற்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இன்று மதியம் 2.45 மணியளவில் நடைபெற்ற விசாரணையின்போது தொழிற்சங்கம் சார்பில், “அரசு வழங்கிய ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான வித்தியாசம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

மேலும் போராட்டத்தின் போது ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்றுக்கொள்வதாகவும். எனினும், தொழிற்சங்கங்கள் கேட்கும் ஊதிய உயர்வை வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்திற்கான ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படாது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெற மாட்டாது. ஓய்வூதியத் தொகையை ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதை விசாரித்த நீதிமன்றம்,” தொழிலாளர்களின் நலன் குறித்து மட்டுமே பேசும் தொழிற்சங்கங்கள், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கவலை கொள்ளவே இல்லை‘ என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் இரு தரப்புக்கும் இடையே நடுநிலையாக பேச்சுவார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து பத்மநாபன் விசாரிப்பார் எனவும், ஊட்குய உயர்வில் உள்ள வித்தியாசம் குறித்து பேச்சுவார்த்தையை பத்மநாபன் நடத்துவார் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே ஊழியர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். பொங்கல் பண்டிகை காலம், வயதானவர்கள், மாணவர்கள், பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018