மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கவிதைகள்-1

தொகுப்பு: தினேஷ்பாரதி

41ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, நாடகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, திரைப்படம், சிறார் நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள் எனப் பல தரப்பட்ட துறைகளிலிருந்தும் புத்தகங்கள் வெளிவரவுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களை தாண்டி கவிஞர்கள் அனேகம் பேர் உருவெடுக்கின்றனர். நாவல், சிறுகதையைத் தாண்டி கவிதைகளுக்கும் வாசகர்கள் இருக்கின்றனர். அந்தவகையில் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பெறுகின்ற கவிதை நூல்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ரணங்களின் மலர்ச்செண்டு

(கல்யாண்ஜி)

இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது. மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள்.

மௌனம் கலைகிறபோது எழுகிற ஆற்றலை அரிய இயலாது. அது பாற்கடலை கடைவது போல்தான். நஞ்சு நீக்கி அமுதம் திரளும் தருணம்.சொல் உக்கிரம் பெறும்காலம்.

‘குளிராவது ஒன்றாவது? என்று என்றைக்காவது மௌனம் பேசியிருக்குமா? உரத்தக் குரலில் பேசியிருக்கிறது. இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.

(வெளியீடு:சந்தியா பதிப்பகம்)

*

ஆரஞ்சாயணம்

(கல்யாணராமன்)

நீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது ‘ஆரஞ்சாயணம்.’ இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்திரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் கூற்றுகள், பெண்நிலைக் குமுறல்கள், நேரடியான மொழிதல்கள், மௌன அரற்றல்கள் என்று நிகழ்காலக் கவிதை வரித்திருக்கும் எல்லா வகைமாதிரிகளிலும் கல்யாணராமன் கைவரிசை காட்டியிருக்கிறார். பேச்சுமொழிக்கு இணக்கமான கூறுமுறை கல்யாணராமனுடையது. அநேகமாக எல்லாக் கவிதைகளும் திறந்த குரலில் சொல்லப்பட்டிருப்பவை. தன் அந்தரங்கத்துக்குச் சொல்லும் ரகசியத்தைக்கூடத் தன்னிடமிருந்து விலக்கி முன்னிலையில் நிறுத்தியே சொல்லுகிறார். வேடிக்கை பார்ப்பவர்கள் காணாமல் போகவும் கேள்வி கேட்பவர்கள் பிழைத்திருக்கவும் செய்பவை இந்தக் கவிதைகள். (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

*

மகிழ்ச்சியான பன்றிக்குட்டி

(வெய்யில்)

என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது

அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்

என் தேவையைப் பொறுத்து

அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்

சாந்தமாக இப்படிச் சொல்லும்...

“நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!”

எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட

நான் புழக்கடைப் பக்கம் போய் மௌனமாக நின்றேன்

புரிந்துகொண்டு சிரித்தபடி வந்து

வெட்டு மேசையில் படுத்தது

அதன் காதில் சொன்னேன்.

(வெளியீடு: கொம்பு பதிப்பகம்)

*

மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்

(சசிகலா பாபு)

சசிகலா பாபு கவிதைகள், பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டுவந்த ஆண்மொழியைப் பகடி செய்வதன் மூலம் அடைகின்றன. விளைவாக இடதுவலது மாற்றம் பெறாத ஒரு ஆடிப்பிம்பத்தைப் பார்க்கிற அதிர்ச்சியை வாசிக்கிற ஆண்கள் மத்தியிலும், ஆண்மொழிக்கு பழக்கப்பட்ட பெண்களிடத்திலும் உருவாக்குகின்றன.

தன்னை ஒரு உடல் உறுப்பாக ஆண் காண்பதிலிருந்தும் தான் காண்பதிலிருந்தும் ஒரு பெண் மீளும் பயணத்தை சசிகலாவின் கவிதைகள் சித்தரித்திருப்பதைப் போன்று இவ்வளவு நுணுக்கமாக விவரித்திருக்கும் கவிதைகள் சமீபத்தில் வரவில்லை. ஒருவகையில் இந்தக் கவிதைகளின் உச்சம் என சசிகலாவின் கவிதைகளைச் சொல்லலாம். (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

*

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

(ராஜா சந்திரசேகர்)

எந்தக் கவிஞனும் ‘ நான் ‘ நானல்ல. ஆனால் அவனுடைய ‘ நானும் ‘ அதில் ஒளிர்ந்து இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘ நான் ‘ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. (வெளியீடு: சந்தியா பதிப்பகம்)

*

மரநாய் கவிதைகள்

(ஷக்தி)

குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு நன்செய் வழியோர நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தனின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு. தன் வாழ்நிலம் மீதான கவனிப்பை சொற்களாக, படிமங்களாக, காட்சிகளாக விவரிக்கிறார் எனச் சொல்வேன் எனில் அதுவே உண்மை. (வெளியீடு: சால்ட் பதிப்பகம்)

*

ஆண் காக்கை

(சுப்பிரமணி இரமேஷ்)

சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின் உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும் உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளிம்புகளைப் பொருட்படுத்திக் காட்சிகளைக் கூர்மைப்படுத்துகிறார். (வெளியீடு: ஆதி பதிப்பகம்)

(இதன் தொடர்ச்சி காலை 7 மணி பதிப்பில்)

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள்-1

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: சிறுகதைத் தொகுப்புகள்-1

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 11 ஜன 2018