மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு!

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு!

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி 50ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வரும் ஜனவரி 17ஆம் தேதி தமிழ்நாடு பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை சென்னை மாகாணத்திலிருந்து தனி மாநிலங்களாகப் பிரிந்தன. இதைத் தொடர்ந்து மெட்ராஸ் மாகணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து கடந்த 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிர் நீத்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து 1967இல் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம், 1968ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டுவதற்கான சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 11) சட்டமன்றத்தில் 110விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் "தமிழ்நாடு" என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.

வரும் ஜனவரி 14ஆம் நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன் விழா ஆண்டாகத் தமிழக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018