பட்டாசு உற்பத்தியாளர்கள் ரயில் மறியல்!

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று 17வது நாள் போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கைக் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்றுடன் 17வது நாளை எட்டியுள்ளது.
போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று சிவகாசியை அடுத்த திருத்தங்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை மறித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களைக் கலைய செய்து ரயிலை அனுப்பி வைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் உற்பத்தியாளர்கள் அங்கேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வரும் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 17 நாட்களாக 900த்துக்கு மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டாசு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.200 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.