வைரமுத்து அறிவிப்பு!

கவிஞர் வைரமுத்துவின் ‘ஆண்டாள்’ பற்றிய கருத்து மிகவும் பரபரப்பான விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தனது புத்தக விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘ஆண்டாள் தேவதாசியாகப் பெருமாளின் சந்நிதியில் வாழ்ந்து இறந்துபோனவர்’ என்ற அவரது கருத்தில், ‘ஆண்டாள் தேவதாசியாக இருந்தாளா?’ என்று ஒரு தரப்பும், கடவுளின் மனைவியாகிப் போனவளை, இறந்துபோனதாகக் குறிப்பிட்டிருக்கிறாரே, இதனால் ஆண்டாளை தெய்வம் என வழிபடுவதும், அவள் தெய்வத்துக்கு மனைவியானது கேள்வியாகிறதே என்று இன்னொரு தரப்பும் கேள்வியெழுப்புகின்றனர். இவர்களுக்கு கவிஞர்கள் ஒரு தரப்பிலும், பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும் இன்னொரு பக்கமும் பதிலளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தினர், வைரமுத்துவைக் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசிய பாஜக கட்சியைச் சேர்ந்த எச்.ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், 41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. இதில் பல்வேறு பதிப்பகங்களின் மூலம் புத்தகமாக உருவாகிய வைரமுத்துவின் படைப்புகளை விற்பதன்மூலம் அவருக்குக் கிடைக்கும் தொகையை, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.