இரட்டை இலை: சுகேஷுக்கு ஜாமீன் மறுப்பு!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது அதன் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது, தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் சுகேஷைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தவிர்த்து இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை சுகேஷ் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். அதை தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்த் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே சுகேஷ் மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர் மீது மொத்தம் 24 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.