மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

விவாத அரங்கு: ஆண்டாளின் அடையாளம் எது?

விவாத அரங்கு: ஆண்டாளின் அடையாளம் எது?

(ஆண்டாளைப் பற்றி வைரமுத்து தெரிவித்த கருத்தையொட்டி பல தளங்களில் பல கோணங்களில் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் பலரும் இது குறித்துத் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார்கள். அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம். ஆண்டாளைப் பற்றியும் நமது மரபைப் பற்றியும் சமூக மதிப்பீடுகள் பற்றியும் பல கோணங்களில் அலசும் பதிவுகள் இவை - ஆசிரியர்)

அ. ராமசாமி

ஆண்டாளென்னும் கவி

இலக்கியப் பிரதிக்குள் வெளிப்படும் தகவல்களும் உணர்ச்சிகளும் எழுதியவளின்/னின் தன்னிலை வெளிப்பாடு எனத் தீர்மானமாகப் பேசும் விமர்சன முறை பிரதியை மட்டுமே ஆதாரமாகக்கொள்ளாது. அப்பிரதியின் காலம் பற்றிய ஒதுக்கமுடியாத பிற ஆதாரங்களையும், எழுதியவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகமான தகவல்களையும் கொண்டுதான் முடிவு செய்யும்.

ஆண்டாளைப் பொறுத்தவரையில் அவள் எழுதிய திருப்பாவை என்னும் 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி என்னும் 143 பாடல்களையும் கொண்ட பிரதி ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. இப்பிரதிகளின் வெளிப்பாட்டுத்தன்மை, உணர்வெழுச்சிகள் எல்லாம் ஒரு பெண் தன்னிலையின் உடல் வெளிப்பாடுகளாகவும் மற்றும் மன வெளிப்பாடுகளாகவும் குறிப்பான வெளிக்குரியதாகவும் குறிப்பான காலத்தில் வாசிக்கத்தக்கனவாகவும் முன்வைக்கின்றன.

கடவுளின் மீதான காதல் என்னும் மையத்தில் நின்றுகொண்டு தன்னை -உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அளிக்க நினைக்கும் மனநிலை அது. அந்தவகையில் ரசிக்கத்தக்க கவிதை வெளிப்பாடு. இதனைத் தாண்டி அவளைப் பற்றிய தகவல்களும் வரலாறுகளும் கவிதைப் புனைவைவிடக் கூடுதல் புனைவுகள் நிரம்பியவை. புனைவான வரலாற்றைக்கொண்டு அவளைத் தெய்வப் பெண் எனவோ தேவதாசி எனவோ முடிவு செய்வது இலக்கிய விமர்சனத்தின் எல்லைகளுக்குள் இல்லை. அவையெல்லாம் தனிமனித இச்சை சார்ந்த குறிப்புகள்.

*

Geetha Narayanan

தேவரடியார்கள் பாலுறவுத் தொழிலாளர்களா?

இங்கு துன்புறுத்தப்பட்ட, தன் ‘ஒழுக்கத்தை’ நிரூபிக்க உயிர்விட்ட, தீ பாய்ந்த, தலை வெட்டுப்பட்ட, தன் குடி காக்க உயிர்விட்ட , பாலியல் வன்முறையில் உயிர்விட்ட, வாழ்வாதரம் இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட, படையெடுப்புகளின்போது உயிர்விட்ட, குடும்ப / குல மானத்துக்காகக் கொல்லப்பட்ட அனைத்துப் பெண்களும் தெய்வங்கள், அம்மன்கள். அவர்கள் கோயில்களுக்கும் உள்ளேயும், வெளியேயும் நம் வரலாற்றுக்குச் சான்றாக நிற்கிறார்கள். பெண் நாட்டார் தெய்வங்கள் பின்பு வைதீக தெய்வங்களாகவும் ஆனார்கள்.

ரொம்ப முக்கியமாக, தேவரடியார்கள் என அழைக்கப்பட்டவர்கள் பாலுறவுத் தொழிலாளர்கள் இல்லை. ராஜ ராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியாரின் பெயர் தேவரடியாரின் பெயராகத் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. தாசிப் பெண்மணிகள் கட்டிய மண்டபங்கள், வெட்டிய குளங்கள் வரலாறெங்கும் சான்றுகளுடன் உள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் வந்த பெரும்பஞ்சத்தில் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பசியாற்றிய தாசிப் பெண்மணியின் இறுதிச் சடங்கு மதுரை மாநகரமே வழி அனுப்பி நடந்ததாம். எனவே, தாசி என்ற சொல்லைக் குழப்பமாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பிற்காலத்தில் வேறு ஒரு சூழல் வந்திருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட மாதிரி சமூக அவலங்களுக்கு ஆளான அத்தனைப் பெண்களும் நம் சமூகத்தில் தெய்வங்கள்தான். ஒரு தாசிப் பெண் அல்லது பாலுறவுத் தொழிலாளர் தெய்வமாவதில் பிரச்னை இல்லை.

அப்புறம் இந்த ஜோதியில் கலந்த, தெய்வத்தில் கலந்த நந்தன், ஆண்டாள் ஆகியோரின் யதார்த்தம் என்னவாக இருக்கும் என யோசிப்போம். ஆண்டாளின் வாழ்வு குறித்து இங்கு பல்வேறு ஆய்வுகள் உண்டு.

*

Kolappan Bhagavathy

தேவதாசி என்றால் கேவலமா?

பக்தி இலக்கியத்தில் ஆண்டாளின் பங்கு குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரை மிகச் சிறந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தினமும் பாசுரம் படிப்பவன், விளக்கவுரை கேட்பவன் என்ற அடிப்படையில் வைரமுத்து எழுதியிருப்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆண்டாள் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த தேவதாசிகளில் ஒருத்தி என்று தெரிவிக்கப்பட்ட கருத்து அவருடையதல்ல. இண்டியானா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டதையே தெரிவித்து, அதை பக்தர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

ஆண்டாளை ஒரு தேவதாசியாக இருக்கலாம் என்றதுமே துள்ளிக் குதிப்போர் தேவதாசி என்றால் கேவலம் என்ற முடிவுக்கு வந்து பேசுகிறார்கள். ஆனால், இந்த இந்து மதமும் மன்னர்களும் கோயில்களும் தேவதாசி முறையைப் போற்றி வளர்த்தன என்பதை மறந்து விடுகிறார்கள். தேவரடியார் என்ற அவர்கள் பெயர் பின்னால் கேவலமான ஒரு வார்த்தையாக மாறியது.

பெண்களைப் பொட்டுக்கட்டிக் கோயிலுக்குத் தாரை வார்த்த ஒருமுறை குறித்து வெளிப்படையாக இவர்கள் பேசத் தயாரா என்று நான் கேட்க விரும்புகிறேன். இத்தனைக்கும் இந்த ஊரில் நாட்டியத்தையும் இசையையும் பெரிதும் வளர்த்தவர்கள் தேவதாசிப் பெண்கள்தான். பின்னர் அந்த முறை சீரழிந்து போனது. அவர்கள் ஆடிய ஆட்டத்தை சதுர் என்று குறை சொன்னவர்கள் அதை ஏற்றுக்கொண்டு பரத நாட்டியம் ஆடினார்கள்.

வைரமுத்து எழுதிய கட்டுரையை முழுமையாகப் படிக்க வேண்டும். ஒரு வரியை எடுத்துக்கொண்டு சாடுவது தவறு. அப்படியே எழுதியிருந்தாலும் அதில் தவறொன்றுமில்லை. கடவுள் மீதான, தூதர் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்து மதம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு ஏராளமான சுதந்திரத்தைத் தந்திருக்கிறது. மற்ற மதத்தில் இல்லை. அந்தத் தனித்தன்மையையும் கலைப்பவர்கள்தான் வைரமுத்து வரை எதிர்ப்பவர்கள்.

ஆழ்வார்களில் ஒரே பெண் ஆண்டாள். பக்தியின் ஒரு வெளிப்பாடாக காதலும் காமமும் வெளிப்படுகிறது. கிருஷ்ணபிரேமியே தன்னுடைய உரையில் காமம் புருஷார்த்தம், அதாவது காமம் அடைய வேண்டியதுதான் என்கிறார். அத்துடன் காமம் இ்ல்லாத காதல், வெல்லம் சேர்க்காத மாவு போல் சப்பென இருக்குமென்கிறார்.

அதனால்தான் மற்ற ஆழ்வார்களும் நாயகி பாவத்தில் பிரபந்தங்களை அருளிச் செய்தார்கள். பராங்குச நாயகியாக நம்மாழ்வாரும் பரகால நாயகியாகத் திருமங்கையாழ்வாரும் பாடிய பாசுரங்கள் மிகச் சிறப்பானவை. தாயாராகவும் அவர்கள் தங்களை வரித்துக்கொண்டு, கண்ணன் என்னும் கருந்தெய்வத்தை அடையத் துடிக்கும் மகளிடம் உரையாடுகிறார்கள்.

ஆண்டாள் பெண்ணாக இருப்பதால் அவளுக்கு அந்த பாவத்தை வரித்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. மற்றவர்களோ ஆண்கள். ஓர் ஆணுக்கும் இன்னோர் ஆணுக்கும் அதிகபட்சமாக என்ன உறவு இருக்க முடியும். இரண்டறக் கலக்க விரும்பும் மனநிலை உச்சக் கட்டத்தை எய்யும்போது பெருமாளுடைய காதலியாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா, புற்றரவ அல்குயில் புனமயிலே போதராய், செப்பென்ன மென்முலை, உன்னித்தெழுந்த எம்தடமுலைகள் என்று வார்த்தைகள் வெளிப்படுகின்றன.

அவளுக்குக் கண்ணனே முதல் குறி. நம்மவருக்குக் கண்டனமே முதல் குறியாக இருக்கிறது.

*

Elangovan Muthiah

ஆண்டாள் ஒரு புரட்சிக்காரி

Unconditional Love என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதை வாழ்க்கையில் பெற்றுக்கொண்டவர்கள் பாக்கியவான்கள். அதை இன்னொருவருக்கு வழங்கியவர்களை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால், இங்கு எல்லோருக்குமே *terms and conditions apply உண்டு.

ஒரு வகையில், அப்படி ஒரு unconditional love க்கு ஆகச்சிறந்த உதாரணம்தான் ஆண்டாள். சரணாகதி தத்துவம் என்றெல்லாம் இல்லை. ஆண்டாள் பாடல்களை முழுமையாக வாசித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

‘என்னிடம் இவ்வளவு இருக்கிறது, என்னை ஏற்றுக்கொள்’ என்கிற இறைஞ்சுதல் தொனியைவிட, ‘பார்த்துக்கோ மகனே, எங்கிட்ட இவ்ளோ மேட்டர் இருக்கு, இஷ்டம்னா வா’ என்கிற தொனியை ஆண்டாள் பாடல்களில் அதிகம் பார்க்கலாம். சரியான தெனாவெட்டான ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

அந்த வகையிலும், விரகத்தை இவ்வளவு வெளிப்படையாகச் சொன்ன விதத்திலும் (ஆண்டாளின் காலத்தை ஒப்புநோக்க) ஆண்டாள் ஒரு புரட்சிக்காரியாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறாள். இன்றைக்குப் புரட்சி, பெண்ணியம் பேசும் எத்தனையே பேரை அந்தக் காலத்திலேயே விஞ்சியவள் ஆண்டாள்.

ஆண்டாள் பாசுரங்களை வெறும் கிளுகிளு பாடல்களாக மட்டும் பார்ப்பது என்பது அரைவேக்காட்டுத்தனமன்றி வேறல்ல. அதேசமயம் ஆண்டாள் பாசுரங்களுக்குப் புனித பிம்பம் ஏற்றும் அரைகுறைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

இறை நம்பிக்கைக்கும், ஆண்டாள் பாசுரங்களை ரசித்து அனுபவிப்பதற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இதை இந்தப் போஸ்ட்டுக்கு டிஸ்கியாக வைத்துக்கொள்ளவும்.

*

Ananthakrishnan Pakshirajan

நான் அறிந்தவரை இந்தியானா பல்கலைக்கழகத்திலிருந்து திரு.வைரமுத்து குறிப்பிட்ட புத்தகம் வந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைக்கொண்ட புத்தகம் சிம்லா Institute of Advanced Studiesஇல் இருந்து 1978இல் வந்திருக்கிறது. அதில் இந்த வரி வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், ஒன்றரையணா ஆராய்ச்சியாளர்கூட இப்படித் தடாலடியாகச் சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்

ஆண்டாள் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் அவர் தமிழின் அரிய சொத்து என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை...

… ஆண்டாள் யார் என்பதற்கு நமக்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் இருக்கின்றன.

பெரியாழ்வாரே ‘ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்’ என்று சொல்கிறார். இது தன் பெண்ணை இளவயதில் பறிகொடுத்த தந்தையின் கூற்றாகக் கொள்ளலாம்.

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் அவர் எங்கு வளர்ந்திருக்கலாம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

ஆண்டாளைப் பற்றி மற்ற கதைகள் எல்லாம் குரு பரம்பரையில் இருந்து வந்தவை. அவை என்ன சொல்கின்றன என்பது படித்தவர்களுக்குத் தெரியும். குரு பரம்பரையில் ஆழ்வார்கள் பிறந்த குலங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாசி என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொண்டு செய்பவர் என்ற பொருள் உண்டு. வைணவ மரபில் எல்லோரும் தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அந்த வகையில் எல்லா ஆழ்வார்களும் தேவநாதனின் தாசர்கள்தாம். ஆண்டாளும் அவரின் தாசிதான்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018