மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

முதல்வர் செங்கோட்டையன்?: தகுதி நீக்க வழக்கு விசாரணை முழு விவரம்!

முதல்வர் செங்கோட்டையன்?: தகுதி நீக்க வழக்கு விசாரணை முழு விவரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘நாங்கள் செங்கோட்டையனை முதல்வர் ஆக்கும் திட்டத்தோடே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தோம்’ என்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதுபற்றி நேற்று (ஜனவரி 10) மாலை 7 மணி பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

சபாநாயகருக்கும், சபை செயலாளருக்காகவும் ஆரியமா சுந்தரம் ஆஜரானார். கொறடாவுக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். முதல்வருக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மூத்த வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.

“சபாநாயகருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. இயற்கை நீதி, எதிர்மனு உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க சபாநாயகர் என்பவர் நீதிமன்றம் அல்ல. அவருக்கே உரிய அதிகாரத்தோடு அவரது கருத்தின் அடிப்படையில்தான் சபாநாயகர் முடிவெடுப்பார். இதில் நீதிமன்றம் சட்டரீதியாக தலையிட முடியாது” என்று வாதிட்டார் முகுல் ரோத்தகி.

முதல்வருக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் வைத்தியநாதன், “சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கினார். பிறகு சசிகலாவைக் கட்சியில் சேர்த்தபோது, ‘சசிகலாவின் குடும்பத்திலிருந்து யாரும் கட்சியில் பதவியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் தான் சேர்த்தார். ஆனால், அதை மீறிதான் பிப்ரவரி 15, 2017 அன்று தினகரனைக் கட்சியில் மீண்டும் சேர்த்து அவரை துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் ஆக்கினார். அது தவறு” என்று வாதிட்டார்.

அப்போது நீதிமன்றம், “அப்படியென்றால் கட்சியில் சசிகலாவின் பதவி என்ன?” என்று கேட்டனர்.

“29-12-2016 அன்று அவைத் தலைவர் மதுசூதனன் அழைப்பு விடுத்து நடத்திய பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இயங்கினார். இந்நிலையில் 10-8-17 அன்று பன்னீர் தரப்பும் பழனிசாமி தரப்பும் இணைவதற்கான கூட்டம் போட்டோம். பின் 30-8-17 அன்று இரு அணிகளும் முறைப்படி இணைந்துவிட்டோம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12, 2017 அன்று அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவையும் தினகரனையும் நீக்கிவிட்டோம்” என்று வாதாடினார்.

அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, “அவர்கள் நடத்தியது ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழுக் கிடையாது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆகிய அணிகள் நடத்திய பொதுக்குழு. இது ஒருங்கிணைந்த அதிமுக அல்ல. ஆனால், சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமித்தது ஒரிஜினல் அதிமுகவின் பொதுக்குழு. இந்த இரு பிரிவுகளும் சேர்ந்து கட்சியாக முடியாது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து வழக்கு நடந்துகொண்டிருக்கிறது” என்று வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட முதல்வர் தரப்பு வழக்கறிஞர், “அருணாசலப் பிரதேச நாபம் வழக்கினை முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம், சபாநாயகருக்கு பிரத்யேக அதிகாரம் உள்ளது என்பதற்கு. மேலும், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கலந்துகொள்ளவில்லை. இதை வைத்துப் பார்க்கையிலே சபாநாயகர் அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று தெரிகிறது” என்று வாதிட்டார்

பிற்பகல் மீண்டும் தொடங்கியது விசாரணை.

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அந்த 18 பேரும் அதிமுகவுக்கு எதிராகத்தான் வேலை செய்தார்கள். அதன்படி பார்த்தால் அவர்கள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்ற கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள். தகுதி நீக்க நடவடிக்கைக்குப் பொருத்தமானவர்கள்தான். இந்த் நிலையில் இவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை பற்றி சபாநாயகர் மறுபரிசீலனை செய்யவே முடியாது” என்று முதல்வரின் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதத்தை வைத்தார்.

அப்போது நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் முதல்வருக்குச் சட்ட ரீதியான பங்கு என்ன?” என்று கேட்டது.

“முதல்வர்தான் சட்டமன்ற கட்சியின் தலைவர். எனவே, அவர் இந்த விவகாரத்தில் முக்கியமானவர். இந்த நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் முதல்வருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். சட்டப்படி இதில் இன்னும் நெருங்கிய தொடர்புடையவர் கொறடாதான். மேலும் 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்த பின்னர் அவர்கள் மேற்கொண்ட கட்சி விரோத நடவடிக்கைகளையும் தகுதி நீக்கத்துக்கான காரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். ஓ.பன்னீர் மீதான நடவடிக்கை என்பதெல்லாம் வேறு விஷயம்” என்று வாதிட்டார்.

இதன் பிறகு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராமன் வாதிட்டார்.

“சபாநாயகரின் அதிகாரத்தைப் பற்றி வாதிட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சட்ட ரீதியான உரிமையை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதற்கு முன் அவர்கள் மீதான புகார்களுக்கு விளக்கம் சொல்வதற்கான வாய்ப்பே அளிக்கப்படவில்லை. இதன்மூலம் அவர்களது சட்ட ரீதியான உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ரவி நாயக் என்ற தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு கேட்டீர்களா?’ என்று உச்ச நீதிமன்றமே கேட்டிருக்கிறது. எங்களைத் தகுதி நீக்கம் செய்யப் போவதாக சில தொலைக்காட்சிகளுக்கு கொறடா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு விசாரிக்கவில்லை. கொறடாவையே அழைத்து விசாரிக்கவில்லை. சபாநாயகருக்கு எல்லா அதிகாரமும் இருந்தும் எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை” என்று வாதிட்டார்.

செங்கோட்டையனை முதல்வராக்கத் திட்டமிட்டோம்!

இந்த நிலையில் நீதிமன்றம் மேலும் சில கேள்விகளைக் கேட்டது. ஆளுநரிடம் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக புகார் அளித்தார்கள் என்ற நீதிமன்றம் கேட்க, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம்” என்று பதிலளித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன்.

அதற்கு நீதிமன்றம், “ஒரு முதல்வர் மீதான அதிருப்தியை தெரிவிப்பதற்கு ஆளுநர் எந்த வகையில் பொருத்தமானவர்?” என்று மீண்டும் கேள்வி கேட்டது.

“ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவற்காக ஆளுநரைச் சந்தித்துக் கொடுத்தோம்” என்றார் வழக்கறிஞர்.

“ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி என்றால் என்ன நோக்கம்?” என்று மீண்டும் நீதிமன்றம் கேட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர் ராமன், “ஆமாம்... முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம்” என்று தெரிவித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞரான ராமன்.

சில நாள்களுக்கு முன் தூத்துக்குடி சென்ற டி.டி.வி.தினகரன், அங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கடந்த 30 வருட அரசியலில் செங்கோட்டையன் மிக முக்கியமானவர், மூத்தவர். அவரை அவை முன்னவர் என்ற பதவியில் இருந்து அகற்றியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018