ஜனவரி 12: அப்போலோவுக்குக் கெடு!

ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை ஜனவரி 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்போலோ நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் நிலவும் மர்மம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் பலரும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அப்போலோ நிர்வாகம் சார்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஜனவரி 5ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டதையடுத்து, அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், ஜனவரி 5ஆம் தேதிக்குள் ஆதாரங்களை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதாகவும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் அப்போலோ நிர்வாகத்தின் வழக்கறிஞர் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற விசாரணை ஆணையம், ஜனவரி 12ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. ஜனவரி 12ஆம் தேதிக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் அப்போலோ நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.