மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: கமலின் அறச்சீற்றம் நியாயமானதா?

சிறப்புக் கட்டுரை: கமலின் அறச்சீற்றம் நியாயமானதா?

தனியன்

“காசுக்கு வாக்களிப்பது பிச்சையெடுப்பதற்குச் சமம்” என ஆழ்வார்பேட்டை அரசியல் ஞானி திருவாய் மலர்ந்திருக்கிறார். மெத்தச் சரி. வாக்காளர்கள் தம் வாக்குகளை விற்கக் கூடாது என்கிற கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதை அவர்களிடம் வலியுறுத்துவதும் பிழையல்ல.

இந்திய நாடாளுமன்ற அரசியலில் ஐந்தாண்டுகளுக்குத் தம் அன்றாட வாழ்வையும் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் உள்ளூராட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் தமிழக வாக்காளர்கள் கூடுதல் பொறுப்புடனும் மேலதிக முதிர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க எல்லோருக்கும் உரிமையுண்டு. பொதுமக்கள் தம் கடமை உணர்ந்து நடக்காமல் போனால் அவர்களின் பொறுப்பின்மையைக் கண்டு பொருமுவதிலும் அறச்சீற்றம் கொள்வதிலும்கூடப் பெரிய குறையில்லை.

அறச்சீற்றம் கொள்வதற்கான தகுதி எது?

ஆனால், அதை வெளிப்படுத்துபவர்கள் ஒரே ஒரு நிமிடம் நிலைக்கண்ணாடி முன் நின்று சில கேள்விகளைத் தமக்குத் தாமே கேட்டுக்கொள்வது நல்லது. இந்த அறச்சீற்றம்கொள்ளத் தனக்கு அருகதை இருக்கிறதா? அடுத்தவர் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டுவதற்கு முன் தன் பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்கிறோமா? வாக்காளர்களிடம் எதிர்பார்க்கும் அரசியல் முதிர்ச்சியை, வாய்மையை, நேர்மையை தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்திருக்கிறோமா? - இந்தக் கேள்விகளை ஒரே ஒருமுறை தமக்குள் கேட்டுக்கொண்டால், பொங்கிவந்த அறச்சீற்றம் போன இடம்தெரியாமல் பொசுக்கென அடங்கிவிடும். ஒருவேளை வெளிப்பட்டாலும் நாவடக்கத்துடன் நாகரிகமாக வெளிப்படும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாகத் தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதற்கு முன் கலைஞானி கமல்ஹாசன் அப்படியான எந்த சுய கட்டுப்பாட்டு முயற்சியையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் அவரது அரைவேக்காட்டு அரசியல் அறச்சீற்றத்தில் அறத்துக்குப் பதில் ஆணவமும், சீற்றத்துக்குப் பதில் ஆதிக்கத் திமிரும் எகத்தாளமும் ஏகத்துக்குப் பொங்கி வழிந்திருக்கின்றன.

புகைப்படங்கள் சொல்லும் சேதிகள்

இந்தக் கட்டுரையுடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று 2012ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியின் 14ஆவது ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஜெயா தொலைக்காட்சிக்கான நிதிமூலம் எது என்பது கமலுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அது யாருடைய பினாமி என்று ஊழலை எதிர்த்து இன்று வீரமாக களமாடும் நவீன நக்கீரன் கமலுக்குப் புரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஊழல் வழக்கில் ஒன்றுக்குப் பலமுறை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட, அரசியல் ஊழலுக்கும் அடக்குமுறை ஆட்சிக்கும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உதாரண புருஷியாக வாழ்ந்து மறைந்தவரின் நிறுவன நிகழ்ச்சியில் அவருக்கு இருபுறமும் இரண்டு துவார பாலகர்களாகக் கைகட்டி அடக்க ஒடுக்கத்துடன் நிற்கும் இந்த இரண்டு நெட்டை நெடுமரங்கள் செய்த செயலை என்ன சொல்லி அழைப்பார் Mr இந்தியன் தாத்தா? ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணியும் அடிமைகள் என்பாரா?

அடுத்த புகைப்படம் அதைவிட முக்கியமானது. காரணம், இந்தப் படம் கமலுக்கு மறந்திருக்காது. ஏனெனில் அதில் அவர் அவமதிக்கப்பட்ட விதம் அப்படி. 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதில் அப்படி என்ன நடந்தது? அதுகுறித்து அப்போதைய பத்திரிகைகளில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து திமுக தலைவர் மு கருணாநிதி எழுதிய கடிதத்தின் சில வரிகள் கீழே:

“நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன் வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பிப் பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்தக் கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும். அந்தச் சாதனைக் கலைஞர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காவிட்டால்கூட, அவர்கள் வரும்போதே வரவேற்று, அவர்களுக்கெனத் திட்டமிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமரவைத்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் அமர்ந்தவுடன் அங்கிருந்து அகற்றிப் பின்வரிசையில் அமர வைத்தது பண்பாடற்ற செயல் என்றே கூற வேண்டும். எந்த அளவு வேதனைப்பட்டிருப்பார்கள்? அது மாத்திரமல்ல; மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அந்தப் புகைப்படத்தை ஏடுகளிலே வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ரஜினியும் கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்றுகொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன். அவர்களுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பார்கள்? அனிச்ச மலரையொத்தவர்கள்... நான் மறுபடியும் கூறுகிறேன்; ஏதோ குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இதைத் தெரிவிக்கவில்லை. முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்தான் ஆழ்ந்து ஆலோசித்துக் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால், கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக, அனிச்ச மலரை ஒத்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனம் வேதனை அடையும்படி - தன்மானம் காயப்படும்படி நடந்துகொள்ளக் கூடாது.” (https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-slammed-jaya-film-industry-for-insulting-seniors/articlecontent-pf26577-184297.html)

இப்படியாகத் தன்னை அழைத்து அவமானப்படுத்திய அன்றைய ஆட்சியாளர் அன்புச் சகோதரி குறித்து ஆழ்வார்பேட்டை ஆளவந்தார் மறந்தும் வாய் திறந்தாரில்லை. என்ன காரணம்? போயஸைப் பகைத்துக்கொண்டால் தனது திரைப்பட வெளியீட்டில் இடையூறுகள் வரும் என்கிற அனுபவப் புரிதல் தந்த அடிமனத்துப் பயம் என்று சந்தேகிக்கலாமா?

புதிய “இடைத்தேர்தல் இலக்கணம்”

தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்தான் இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஜெயிக்கும் மரபே இல்லாமல் அடியோடு அழிக்கப்பட்டது என்கிற சமகால வரலாறு உங்களுக்குத் தெரியுமா சகலாவல்லவனே? காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திமுகவும், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் அதிமுகவும், எம்ஜிஆர் ஆட்சியில் திமுகவும் இடைத்தேர்தல்களில் இயல்பாக வென்ற வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல்களில் இனிமேல் வெல்லவே முடியாது என்கிற புதிய “இடைத்தேர்தல் இலக்கணத்தை” உருவாக்கி இருபத்தி ஐந்து ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய சர்வாதிகாரி சாட்சாத் கமலும் அவரது ஆருயிர் நண்பர் ரஜினிகாந்த்தும் அடக்க ஒடுக்கமாக நின்று காவல்காக்கும் ஜெயலலிதா என்பது கமலுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரியாது என்றால் அரசியல் பற்றி பேசவும் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு அற வகுப்பு எடுக்கவும் கமலுக்கு அருகதை இல்லை என்று பொருள். தெரிந்தும் அதன் காரணகர்த்தாவை விமர்சிக்காமல் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு மட்டும் அற வகுப்பெடுக்கிறார் என்றால் அதைவிட அவல நகைச்சுவை வேறொன்றிருக்க முடியாது.

ஆர்.கே. நகரில் வெற்றிபெற்ற தினகரன் அரசியல் தில்லுமுல்லு திருகுதாளங்களை ஆழ்ந்து பயின்ற ‘அம்மா பல்கலைக்கழக’ நிறுவனர் ஜெயலலிதா. ஆளும்கட்சிக்கான இடைத்தேர்தல் அராஜக மோசடிக்கு அடிப்படை இலக்கணம் என்ன என்பது முதல் ஆட்சியில் இடைவிடாமல் ஊழல் செய்வது எப்படி என்பது வரை எல்லாமே போயஸ் தோட்டப் பெருமாட்டி போட்டுக்கொடுத்த பாதையில்தானே தினகரன் அட்சரம் பிசகாமல் அப்படியே பயணிக்கிறார். போயஸ் தோட்டப் பெருமாட்டியின் பொதுமேடையில் நாற்காலிகூட இன்றி நிற்கவைத்தபோது தனக்கு வராத சுயமரியாதயை இன்று மற்றவர்களுக்குக் கமல் உபதேசிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

எங்கே போனது கோபம்?

அடுத்தது தேர்தல் தில்லுமுல்லுகளில் உலகுக்கே வழிகாட்டிய கமல்ஹாசனின் உடன்பிறவா “அன்புச் சகோதரி” ஊழல் வழக்கில் கையும் மெய்யுமாய் பிடிபட்டார். சுமார் இருபதாண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கில் அவரை பெங்களூரு நீதிமன்றம் தண்டித்தது. முழுக்க முழுக்க இந்திய அரசியல் சட்டப்படி கொடுக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு சினிமாத் துறையும் கொந்தளித்தது. “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?” என்கிற போஸ்டர்களின் முன்னால் கமலின் தாய்வீடான தமிழ் சினிமாத் துறை வீதிக்கு வந்து போராடியது; உண்ணாவிரதம் இருந்தது; அந்த அற்பத்தனத்துக்கு கமல்ஹாசனின் அறச்சீற்ற அகராதியில் என்ன பெயர்? ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த சினிமாத் துறையும் வீதிக்கு வந்து போராடிய பெருங்கேவலம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கேனும் அரங்கேறியிருக்கிறதா? அப்போதும் கமல் சென்னையில்தானே இருந்தார்? அப்போதும் twitter தொழில்நுட்பம் இருந்ததே? அப்போது எங்கே போனது கமலின் விரல் நுனி வீரம்?

சென்ற மாதம்கூடத் தமிழ்த் திரைத் துறையின் கந்து வட்டிக் கொடுமை தாங்காமல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டாரே? தம் அகால மரணத்துக்குக் காரணமானவர்களை அவரது தற்கொலை கடிதம் தெளிவாக அடையாளம் காட்டியதே? அதுகுறித்து கமலின் கருத்தென்ன? தமிழ் சினிமாத் துறையைக் கரையானாக அரித்துக்கொண்டிருக்கும் கந்து வட்டிக் கொடுமைக்கு எதிரான கமலின் கோபம் எங்கே? அதை தடுப்பதற்கான அவரது அற உபதேசம் எங்கே?

அன்றாடங்காய்ச்சிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தம் வாக்கை விற்பதாகப் பொங்கியெழும் கமலின் அறச்சீற்றம் அவரது சொந்த சினிமாத் துறை அதைவிட கேவலத்தை அனுதினமும் செய்தாலும் “தீண்டேன் திருநீலகண்டமாய்” திருவாய் திறக்காமல் காத்த / காக்கும் காரிய மவுனத்துக்கு என்ன பெயர்? கோடிகளில் புரளும் தமக்குக் காரியமாக வேண்டுமானால் கமல் கவனமாகக் கள்ள மவுனம் காப்பார். எவ்வளவு மோசமானவர்களுடனும் மேடையைப் பகிர்ந்துகொள்வார். அங்கே நாற்காலிகூட போடாமல் நிற்கவைத்தால் நெடுமரமாய் நின்றுவிட்டு மவுனமாய் வீடு திரும்புவார். ஆனால், ஏழைபாழைகளுக்கு மட்டும் எகத்தாளம் பொங்க இலவச அற வகுப்பெடுப்பார். அப்படித்தானே?

நம்மைவிட ஏதோ ஒருவகையில் எளியோரை, அவர்தம் இயலாமையை, போதாமையை எள்ளி நகையாடுவதல்ல வீரம் திரு.கமல் அவர்களே. நம்மைவிட ஏதோ ஒருவகையில் வலிமையானவரை எதிர்த்து நிற்பதும் கேள்வி கேட்பதுமே வீரமென்றறிக.

அப்படியானால் வாக்காளர்கள் எல்லோரும் நல்லவர்களா, அவர்கள் செய்யும் தவறுகளை யாருமே சுட்டிக்காட்டக் கூடாதா என்கிற கேள்வி எழலாம். வாக்காளர்களுக்கு அற வகுப்பெடுப்பதற்கு முன் அதைத் தம் வாழ்நாளில் கொஞ்சமேனும் கடைப்பிடித்துக்காட்டியவர்கள் அல்லது அந்த வாக்காளர்களுக்காகத் தம் உடல் பொருள் ஆவி என ஒட்டுமொத்த வாழ்வையும் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் வாக்காளர்களுக்கான அற வகுப்பென்ன வாக்காளர்களை எதிர்த்து அறம் பாடவும் செய்யலாம். தமிழ்நாட்டில் பெரியாரும் இந்தியாவில் அம்பேத்கரும் அப்படியானவர்கள். காந்தியையும் அந்தப் பட்டியலில் சேர்க்கலாம். ஹேராம் படத்தில் காந்தியைக் கொன்றவன் தரப்பு நியாயத்தை விரிவாய் ஆராய்ந்த கமலுக்கு பொதுவாழ்வின் பொறுப்பென்ன என்பதெல்லாம் புரிந்துகொள்வது சிரமமாய் இருக்கலாம். எனவே, அவருக்கு எளிதில் விளக்க இந்தத் திருக்குறள் பயன்படக்கூடும்.

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”

கலைஞர் மு.கருணாநிதி உரை:

“ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.”

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018