புத்தகக் காட்சி: கவிதா பப்ளிகேஷனுக்கு விருது!

சென்னைப் புத்தகக் காட்சியில் சிறந்த பதிப்பாளருக்கான விருது கவிதா பப்ளிகேஷன் நிறுவனர் சேது சொக்கலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 41ஆவது புத்தகக் காட்சி நேற்று (ஜனவரி 10) சென்னையில் தொடங்கியது. இதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறந்த பதிப்பாளருக்கான ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் சேது சொக்கலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் செங்கோட்டையன் அவருக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வு தொடர்பாக கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பணியாளர் இ.மணிகண்டனைத் தொடர்புகொண்டு பேசினோம். புத்தகக் காட்சி அரங்கில் பணிபுரிந்து கொண்டிருந்ததால் பிறகு தொடர்பு கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் தொடர்புகொண்ட அவர், அந்நிகழ்வு குறித்தும் பதிப்பகம் சார்ந்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிறந்த பதிப்பாளருக்கான விருது நிறுவனர் சொக்கலிங்கத்துக்குக் கிடைத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த விருது கிடைத்திருப்பதில் எங்கள் நிறுவனர் உட்பட பணியாளர்களாகிய நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சென்னை 41ஆவது புத்தகக் காட்சி தொடங்கி இருக்கிறது. எங்களுடைய பதிப்பகமும் 41ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நன்நாளில் எங்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
எப்போது பதிப்பகம் தொடங்கப்பட்டது?
வணங்காமுடி, தமிழ்த்தாய் உள்ளிட்ட பல பதிப்பகங்களில் பணிபுரிந்தவர் எங்கள் நிறுவனர். அதன் பின்னர் 1975இல் திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருஷமே மகள் பிறக்க அவருடைய பெயரான கவிதா என்ற பெயரிலே அதே வருடத்தில் சொந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினார்.
எந்தெந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் உங்கள் பதிப்பகத்தில் இடம்பெற்றிருக்கின்றன?
முன்னணி எழுத்தாளர்கள் பத்து பேரின் புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்தில் இருக்கின்றன. அதாவது சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகம்.
கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?
தோராயமா சொல்லணும்னுனா... குன்றக்குடி அடிகளார், ஜெயகாந்தன், ‘தீபம்’ பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், பிரபஞ்சன், சா.கந்தசாமி, சிற்பி, மு.மேத்தா, அறிவுமதி, சாலமன் பாப்பையா, சுகி.சிவம், இளையராஜா அப்புறம்... வாண்டு மாமா, ருத்ரன், விக்கிரமன், ஜெயமோகன், வாஸந்தி, இறையன்பு சாரோட சகோதரின்னு ஏகப்பட்ட எழுத்தாளர்களோட புத்தகம் எங்கள் பதிப்பகத்தில வெளிவந்திருக்கிறது.
பதிப்பகம் சார்ந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் சொல்லுங்களேன்?
அதாவது, கடந்த 24ஆம் தேதி திருச்சி புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரத்தோட ‘கண்ணுறங்கா காவல், உண்மையை உறக்கச் சொல்வேன்’ என்கிற இரண்டு புத்தகத்தோட வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில வைரமுத்து பேசும்போது, “இந்தப் புத்தகத்தை எல்லாரும் படிக்கணும். அதைத் தாண்டி பிரதமரும் படிக்கணும்” அப்படின்னு சொன்னார். அந்தச் சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது.
உங்கள் பதிப்பகத்தின் சிறப்பம்சம்?
எந்தப் பதிப்பகமும் முயற்சி செய்யாத அளவுக்கு மாதவ சிவஞான முனிவரோட 32 நூல்களையும் முனைவர் நல்லூர் சரவணன் சாரோட ஐந்து வருட உழைப்பில் கொண்டு வந்திருக்கோம். அதை செம்மொழி மாநாட்டில் கனிமொழியும் ஜி.கே.வாசனும் வெளியிட்டார்கள்.
‘பபாசி’ தலைவராக இருந்திருக்கிறாரா?
ம்ம்... ஒரு தடவை தலைவராக இருந்திருக்கிறார். பபாசியில் ஒருமுறை தலைவர் பதவி என்பது இரண்டு வருஷங்கள். அதுக்கப்புறம் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பபாசியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவருடைய நல்லெண்ணம் பற்றி?
புதுசா வர்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். அதைத் தாண்டி, புதுசா பதிப்பகம் தொடங்க வர்றவங்க... புதுசா புத்தகம் போட வர்றவங்களுக்கு நிறைய ஐடியா தருவதோடு, வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
அலுவலகத்தில் பணிபுரிவர்களை எப்படி கையாள்கிறார்?
அலுவலகத்தில் வேலை பார்க்கிறவங்க எல்லாரையும் குடும்பத்தில் ஒருத்தராகப் பார்த்துக்கொள்வார். அவர் மட்டுமல்ல அம்மா (அவரின் மனைவி), அவரோட பொண்ணு கவிதாக்கா எல்லாரும் நல்லா பார்த்துக் கொள்வார்கள்.
பதிப்பகத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?
கிட்டத்தட்ட 3500க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்கள் வெளியாகி உள்ளது. எங்கள் பதிப்பகத்தோட 40ஆவது ஆண்டு விழாவில் 120 புத்தகங்கள் வெளியிட்டோம். இதைத் தாண்டி புத்தகங்கள் எல்லாரிடமும் போகணுங்கிற நல்லெண்ணத்தில நல்ல சிந்தனை தரக்கூடிய வகையில 10 ரூபாய் புத்தகங்களில் 250 டைட்டில் வெளியிட்டிருக்கோம் என்று அந்த நிகழ்வு குறித்தும் பதிப்பகம் சார்ந்தும் பகிர்ந்து கொண்டார்.
பதிப்பகம் தொடங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பலரும் தொடங்கி பின்னர் மற்ற பதிப்பகங்களோடு போட்டி போட முடியாமல் காணாமல் போகும் பதிப்பகங்களுக்கு மத்தியில், வெற்றிகரமாக 41ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதுடன், சிறந்த பதிப்புக்கான விருதினையும் பெற்றிருக்கிறது கவிதா பப்ளிகேஷன்ஸ். ஆகையால், நம் மின்னம்பலம்.காம் சார்பாக அந்நிறுவனத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
- தினேஷ் பாரதி