கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மதம் பார்க்கப்படுகிறதா?


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கடவுள் வாழ்த்து இசைக்கப்படும்போது குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 1,100க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் காலை கடவுள் வாழ்த்து இசைக்கப்படும்போது இந்து மத பாடல்களை மட்டுமே இசைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் வினாயக் ஷா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், “அனைத்து மதமும் சமம் என்ற நிலையில் கேந்திரிய வித்யாலயாவில் இந்து மத பாடல்கள் மட்டுமே இசைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான மனநிலையை வளர்த்துக்கொள்வதை தடுக்கிறது.
கடவுள் நம்பிக்கை அற்ற பெற்றோர் இந்த நிகழ்வில் தங்கள் குழந்தைகள் கலந்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், அனைவரும் கடவுள் வாழ்த்து பாடும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ரோகிண்டன் நார்மன், நவீன் ஷா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கேந்திரிய வித்யாலயாவில் கடவுள் வாழ்த்து இசைக்க அனுமதிப்பது அவசியமா? இந்து மத பாடல்கள் மட்டும் ஏன் ஒலிக்கப்படுகிறது? அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு பாடலை இசைக்க ஏன் வலியுறுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.