நூறாவது செயற்கைக்கோள்: சாதனை படைக்கும் இஸ்ரோ!


இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக்கோளை நாளை (ஜனவரி 12) விண்ணில் செலுத்தவுள்ளது.
2017, ஆகஸ்ட் மாதம் 1,425 கிலோ எடை கொண்ட ஐஆர்என்எஸ்எஸ் 1-எச் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்த இஸ்ரோ அதை பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. ஹீட் ஷீல்ட் எனப்படும் பாதுகாப்பு கவசம் திறக்காததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இஸ்ரோவின் இயக்குநர் அண்ணாதுரை, “எங்களது 39ஆவது முயற்சியான பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். எந்தவித தொழில்நுட்பப் பிரச்னைகளும் இந்த முறை ஏற்படாதவாறு பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சந்திராயன் 2 விண்கலம் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் அதுவும் விண்ணில் செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.