மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 1

சிறப்புக் கட்டுரை: இசை உலகமும் சாதிக் கலகமும் 1

அ. குமரேசன்

“பொழுது நல்லாப் போச்சு... இனிமையான நேரமாக அமைந்தது... நீண்ட நேரம் அந்தப் பாடல்களும் இசையும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது... மறக்க முடியாத மாலை வேளை...” - இப்படியான உணர்வுகளோடும் பாராட்டுகளோடும் கடந்திருந்தால் அது ஒரு வழக்கமான கச்சேரி. “நிகழ்ச்சியில் அவர் கவுரவிக்கப்படவில்லை... இவருக்கு சரியான வாய்ப்பளிக்கப்படவில்லை...” என்பதான விமர்சனங்கள்தான் வருகின்றன என்றாலும் அது ஒரு வழக்கமான கச்சேரிதான்.

ஜனவரி 6 அன்று மாலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ பெயின் பள்ளி வளாகத்தில் நடந்தது ஒரு வழக்கமான கச்சேரி அல்ல. செவிச்சவ்வுகளில் மோதி இதயத்தில் ஏற்பட்ட அதிர்வு ஒலியமைப்பு நுட்பத்தின் விளைவாக இருந்திருக்கலாம். ஆனால், மூளையில் ஓயாமல் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த அதிர்வுக்குக் காரணம் ஒலியமைப்பு அல்ல. பேரோசை. சமூக அமைப்பின் தோலுரித்து, அந்தத் தோலைப் பறையாய், மேளமாய், டிரம்மாய்த் தட்டி எழுப்பிய பேரோசை. சமூக ஊடகங்களில் தொடரும் வாத எதிர்வாதங்கள் இசை பற்றியும் சாதியம் பற்றியும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றன. அதுதான் ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறத் தொடங்கியிருப்பது அதன் வெற்றி.

ஆரம்பமே அதிருதுல்ல!

தொடக்க நிகழ்ச்சிக்கே இந்த அதிர்வு என்றால், சென்னையிலேயே மற்ற பகுதிகளுக்குக் கோட்டும் சூட்டுமாய் அந்த வடசென்னை - மும்பை தாராவி கானா படை அணிவகுக்கிறபோது, தமிழகத்தின் இதர ஊர்களில் முற்றுகையிடுகிறபோது நில நடுக்கத்திற்கு ஒப்பான பெரும் அதிர்வு ஏற்படும் என எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சி பற்றிய எதிர் விமர்சனங்கள் இசைக்கூறுகள் தொடர்பானதாக இல்லாமல், கூறுபோடும் சாதியம் சார்ந்ததாக இருப்பதில், பொங்குகிற பாலில் தண்ணீர் ஊற்றும் நோக்கம் இருந்தாலும், ஒரு விவாதத்திற்கு இட்டுச்செல்வது நல்லதுதான். சிலர் நேரடியாக எதிர்க்காவிட்டாலும், அந்த மேடையின் ஒலி, ஒளி, பின்புலக் காட்சிகள், கலைஞர்களின் ஆடை இவற்றைச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் கலை மேட்டிமைத்தனத்திற்குக் கடத்தப்படுகிறது என்று குறைகூறுகிறார்கள். இதுவும்கூட அந்தப் பெரும் அதிர்வை நோக்கிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிற வேலையாகவே இருக்கிறது.

கலையானாலும் சரி, வாழ்க்கையானாலும் சரி, தொடங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும், புறப்பட்ட இடத்திலேயே நிற்க வேண்டும் என்று நினைப்பது இயக்கவியலுக்கே முரணானது. மேலும், நவீன தொழில்நுட்பத்துடனான மேடையமைப்பு மேட்டிமைத்தனமானது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு வாதத்திற்காக அப்படி வைத்துக்கொள்வதானால், அந்த அறிவியல் தொழில்நுட்ப வசதிகளைக் கைப்பற்றி வைத்திருக்கிற மேட்டிமைக்காரர்களிடமிருந்து அவற்றைக் கையகப்படுத்துவது புரட்சிகரமானதுதான்.

மைக், ஒலிபெருக்கி உள்ளிட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கர்னாடக சங்கீதம் எப்படிப் பாடப்பட்டது? அதிலே இன்றைய நவீன தொழில்நுட்பங்களையெல்லாம் இணைத்துக்கொண்டுவிட்டார்கள். புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், வயலின் என அனைத்திலும் மின்னணு நுட்பங்கள் தயக்கமில்லாமல் புகுத்தப்பட்டுவிட்டன. அதனால் கர்னாடக சங்கீத மூலம் சிதைந்துவிட்டதாகவோ, கீழ்மைப்படுத்தப்பட்டதாகவோ அதைச் சார்ந்தவர்கள் பழிக்கவில்லை. அவர்களிடமிருந்து மற்றவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழக்கம் இது என்று கூடச் சொல்வேன்.

கானா பாட்டும் அதைப் பாடுகிற முறையும் அதைப் பாடுகிறவர்களும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்க வேண்டுமா என்ன? கானா கலைஞர்கள் அப்படியே கைலி கட்டிக்கொண்டு, சாவு வீட்டில் (மட்டும்) பாடிக்கொண்டு, யாராவது ஊற்றிவிடுகிற மதுவைக் குடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களிடமும் ஆணாதிக்க வக்கிரம் இருப்பதன் அடையாளமாகப் பெண்களை இழிவுபடுத்தும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, கடைசியில் கிடைக்கிற கூலியோடு திரும்பிக்கொண்டிருக்க வேண்டும் போல. அதிலிருந்து மாறினால், மாறுவதற்கு உதவினால், நவீன தொழில்நுட்பங்களை வசப்படுத்தினால், வசப்படுத்துவதற்கு உதவினால் அதெல்லாம் மேட்டிமைத்தனமாகிவிடுகிறதாம்.

கானா பாடகர்களின் உடையும் மேட்டிமைத்தனமும்

தலித் மக்கள் பற்றிய விவாதங்களில் இப்போதெல்லாம் அவர்கள் தலித் மாதிரியே இல்லை என்று சொல்கிறவர்கள் உண்டு. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளைப் பற்றிப் பேசுகிறபோது, அவர்களைப் பார்த்தால் விவசாயிகளைப் போலவே இல்லை என்று சிலர் சொன்னார்கள். கதறிய மீனவர்கள் பாரம்பர்ய மீனவர்களைப் போல இல்லை என்று சிலர் முகம் திருப்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தலித்துகள் என்றால் அழுக்கான காக்கிச் சட்டையும் மூக்கைப் பொத்த வைக்கும் மலவாடையுமாக இருக்க வேண்டும். விவசாயிகள் என்றால் இடுப்பில் கோவணமும் தோளில் கலப்பையுமாக நடக்க வேண்டும். மீனவர்கள் முழங்கால் வரையிலான கைலியோடும் கூம்புத் தொப்பியோடும் வர வேண்டும். அதேபோல் கானா பாடகர்கள் என்றால் பழைய தோற்றத்திலேயே பாட வேண்டும். எனது கண்ணோட்டப்படி, இவர்கள் இன்னொரு தளத்தில் கால் வைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் மேட்டிமைத்தனம்.

மேட்டிமைத்தனம் பற்றிய கவலையே கூடாது என்பதல்ல. எச்சரிக்கைக்குரிய சில “மேல்நிலையாக்கல்” முயற்சிகள் இருக்கவே செய்கின்றன. எளிய மக்களின் தெருவோரக் கோயில்களில் சமஸ்கிருத அர்ச்சனை, பிராமணர் அல்லாதார் இல்லத் திருமணங்களில் புரோகிதம் என நுழைந்திருப்பதில் அவர்களது பண்பாட்டு அடையாள அழிப்பும், ஒற்றைக் கலாசார ஆதிக்கப் பரவலும் இருக்கின்றன. அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பதவியின் அடிப்படையிலோ, பண வருவாயின் அடிப்படையிலோ மேலேறி வருகிறபோது, தாங்கள் குடியிருக்கும் வீட்டை வசதியானதாக மாற்றிக்கொள்வது ஏற்கத்தக்கது. ஆனால், சிலர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே கூட நெருங்க முடியாதபடி ஒய்யாரக் கொம்பில் அமர்ந்துகொள்வது தள்ளத்தக்கது.

ஆனால் அது வேறு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாறுவது என்பது வேறு. காஸ்ட்லெஸ் கலெக்டிவ் மேடையில் ஒரு பாடகர், “இனிமேல் எங்களைக் கைலி கட்டிக்கிட்டு பாட வரச்சொன்னா வர மாட்டோம். கோட் சூட் போட்டுக்கிட்டுதான் வருவோம்,” என்று சொன்னார். இந்த கோட் சூட் வெறும் மோகமோ, பந்தாவோ அல்ல. பறையிசையை இழவுக்கானதாக்கி ஒதுக்கிவைத்திருந்த சமூக அமைப்பின் மீதான சீற்றம் போன்றதே இது. ‘கோட் சூட் போட்டவனுக்குத்தானே பணிந்து மரியாதை கொடுத்தாய், இனி எங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்’ என்பதான வெளிப்பாடு இது.

முன்பு அரசு அலுவலகங்களுக்குச் செல்கிறபோது, சஃபாரி கோட் அணிந்து வருகிற கடைநிலை ஊழியர்களையும், பொதுநிகழ்ச்சிகளுக்குக் கோட் சூட்டுடன் வருகிற கறுத்த மேனியரையும் பார்த்தால் தகுதிக்கு மிஞ்சிக் காட்டிக்கொள்கிறவர்கள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். அந்த ஆடையின் சமூக உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள நான் அம்பேத்கரைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

இசைக்குச் சாதி இல்லையா?

இப்போது “இசைக்கு ஏது சாதி” என்ற வாதத்திற்கு வருவோம். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லையே. சாதி இருக்கக் கூடாது என்று விரும்புவது வேறு, அது இருப்பதை ஒப்புக்கொள்வது வேறு. சாதி இல்லை என்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், சாதி இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

செங்கொடி இயக்கத்தில் இணைந்த தொடக்க நாள்களில் உழைப்பாளி வர்க்க ஊர்வலங்களில் என்னை மிகவும் ஈர்த்த, உணர்ச்சிப் பெருக்கோடு நானும் எதிரொலித்த ஒரு முழக்கம்: “போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை!” ஆனால், வாழ்க்கை அனுபவம், “போராட வேண்டிய தொழிலாளிக்குச் சாதி இருக்கு, மதம் இருக்கு” என்று மண்டையிலடித்துத் தெளிவுபடுத்தியது. அந்த முழக்கம் ஒரு லட்சியமேயன்றி, நடப்பு உண்மையல்ல என்பதை உணர்த்தியது.

இந்திய மண்ணின் ஒவ்வொரு சென்டிமீட்டர் பரப்பிலும் இருப்பது சாதி. உலகின் எல்லா நாடுகளிலும் இருப்பது போல இங்கேயும் வர்க்க வேறுபாடுதான் மையம். ஆனால், அதை வலுவாகப் பிடித்து வைத்திருப்பது சாதியமும் பெண்ணடிமைத்தனமும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற சாதியின் வலிமைக்குக் காரணம் அது பண்பாட்டுத் தளத்தில் ஊன்றி நிற்பதுதான். இங்கே கலாசாரப் பெருமை என்று பேசப்படுவதன் அடியாழத்தில் இருப்பது சாதிதான். கலைத் துறை அதற்கு விதிவிலக்கல்ல. இசைத் துறை அதிலிருந்து விடுபட்டதல்ல.

கானா பாட்டையே எடுத்துக்கொள்வோம். அது குறிப்பாக வடசென்னையின் பூர்வீக மக்கள் வாழ்நிலையிலிருந்து புறப்பட்ட கலை. இன்னும் குறிப்பாக தலித் மக்களின், மீனவ இசை. சமூகக் கட்டமைப்பில் அவர்கள் ஒதுக்கப்பட்டது போலவே, “செவ்வியல் இசை” எனப்படும் தளங்களிலிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஒதுங்கியிருக்கவோ, ஒடுங்கியிருக்கவோ தயாராக இல்லாத அவர்கள், தங்களது கொண்டாட்டத்தை, அனுபவிக்கும் கொடூரத்தை, உற்சாகத்தை, துக்கத்தை, பாசத்தை, துரோகங்கள் மீதான கோபத்தைத் தாங்களாக மெட்டமைத்து இட்டுக்கட்டிய பாடல்களால் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

வடசென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நாட்டுப்புறப் பாடல்களும், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளும் ஒதுக்கப்பட்ட மக்களின் வெளிப்பாடுகளாகவே பெருமளவுக்கு இருந்துவந்திருப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. இசை வேளாளர் எனக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தையே குறிப்பிட்ட இசை வடிவத்திற்கென ஒதுக்கியதோடு, அவர்களைத் தாழ்த்தப்பட்டோர் வரிசையில் வைத்ததும் தற்செயலானதல்ல. இசையுலகின் சாதியக் கீழ்மை பற்றிப் பத்திரிகையாளர் கவின்மலர் தனது முகநூல் பதிவில் எழுப்பியுள்ள கேள்விக்கு, “இசையுலகில் சாதி இருப்பதாகக் கூறுவோர் இசையை விட்டு வெளியேறட்டும்” என்று சர்ச்சை கிளப்பிய பாடகர் சீனிவாஸ் பதிலளித்தாரா எனத் தெரியவில்லை.

நாடகங்கள்கூட மேட்டுத் தெருக்காரர்களுக்குத் தனிக் கொட்டகை போட்டும், ஊரின் ஒதுக்குப்புற பள்ளத் தெருக்காரர்களுக்குத் தெருக்கூத்துகளாகவும் நடந்த காலம் உண்டு. கலைக்குச் சாதியில்லை என்று இவர்கள் கொட்டகைக்குப் போனால் வெட்டப்படுவார்கள். திரைப்படம் வந்த பிறகுதான், “நீ யாராக இருந்தால் என்ன, காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால் எங்கே வேணும்னாலும் உட்கார்ந்து பாரு” என்ற மாற்றம் வந்தது. இயல்பாகவே பள்ளத் தெருக்காரர்கள் ஏழைகளாகவும் இருந்ததால், திரையரங்கில் தரை டிக்கெட்தான் வாய்த்தது. பெஞ்சு, நாற்காலி மற்றவர்களுக்கு.

கர்னாடக சங்கீதம் வெள்ளமாய் ஓட, பரத நாட்டியம் சோலையாய் ஆட சென்னையில் டிசம்பர் சீசன் கச்சேரிக் கலாசாரம் எப்போது தொடங்கியதோ, அதில் எப்போதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளுக்கான சீசன் தொடங்கியதுண்டா? அவர்களின் பாட்டையும் ஆட்டத்தையும் சங்கீதம், நாட்டியம் என்ற வகையில் சேர்த்துக்கொண்டதுண்டா? அதே சென்னையிலும் மற்ற ஊர்களிலும் பெருங்கோயில் மண்டபங்களில், இந்தப் பாட்டும் ஆட்டமும் அந்தக் கோயில்களின் கடவுள்மார்களைப் போற்றுவதற்காகவாவது ஏற்றப்பட்டதுண்டா?

(இந்தக் கட்டுரையின் நிறைவுப் பகுதி நாளைக் காலை 7 மணி பதிப்பில்)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 11 ஜன 2018