மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

விமானக் கட்டணத்தை மிஞ்சிய ரயில் கட்டணம்!

விமானக் கட்டணத்தை மிஞ்சிய ரயில் கட்டணம்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், ரயில் கட்டணம் விமான கட்டணத்தைவிட அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஜனவரி 3ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால், ஜனவரி 4ஆம் தேதி முதல் தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், பொதுமக்கள் பணிக்குச் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். இதனால் அரசு ரயில்வேயின் உதவியை நாடியது. கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

அதைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே சுவிதா சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சுவிதா சிறப்பு ரயில்களில் வழக்கமான ரயில் கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்களில் எவ்வளவு இடங்கள் இருக்கின்றன என்பதைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும். இடங்கள் குறையும்போது கட்டணம் அதிகரிக்கும்.

சுவிதா சிறப்பு ரயில்களில் விமான டிக்கெட்டைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12ஆம் தேதி நெல்லைக்குச் செல்லும் சிறப்பு ரயிலில் 3ஆம் வகுப்பு ஏசி வசதி கொண்ட படுக்கைக்கு 3,745 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதன் வழக்கமான கட்டணம் 1,020 ரூபாய் மட்டுமே. அதேபோல், 2ஆம் வகுப்பு ஏசி வசதிக் கொண்ட படுக்கைக்குக் கட்டணமாக 5,300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதன் வழக்கமான கட்டணம் 1,470 ரூபாய் மட்டுமே. வழக்கமாக 375 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2ஆம் வகுப்பு படுக்கைக்கு சுவிதா சிறப்பு ரயிலில் 1315 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவைக்கு 2ஆம் வகுப்புப் படுக்கை கட்டணம் 315 ரூபாய். சுவிதா சிறப்பு ரயிலில் 1,105 ரூபாய். 3ஆம் வகுப்பு ஏ.சி. வசதிக்கு 815 ரூபாய். சுவிதாவில் 3,155 ரூபாய்.

சென்னையிலிருந்து கோவைக்கு 12ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்ய ‘எக்னாமிக்’ கட்டணம் 2600 ரூபாய் மட்டுமே.

விமானக் கட்டணத்தை மிஞ்சும் அளவிற்கு சுவிதா ரயில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018