மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

புத்தகக் காட்சி: மின்னம்பலம் வெளியீடுகள்!

புத்தகக் காட்சி: மின்னம்பலம் வெளியீடுகள்!

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி இன்று (ஜனவரி 10) தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல பதிப்பகங்களின் புதிய வெளியீடுகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில் அரங்கு எண் 379இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள் இடம்பெறுகின்றன. அந்தப் புத்தகங்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மின்னம்பலத்தின் இதர வெளியீடுகள் குறித்த முன்னோட்ட தினமும் வெளியாகும்.

இந்தியப் பொருளாதாரம்: கட்டுக்கதைகள்

ஜெ.ஜெயரஞ்சன்

பொருளாதாரம் சார்ந்த பல்வேறு கற்பிதங்களையும் பரப்புரைகளையும் கட்டுடைக்கும் கட்டுரைகள் இவை. இந்திய அரசின் 2017 ஆண்டு பட்ஜெட், தமிழ்நாடு அரசின் 2017 பட்ஜெட், வேலையில்லாதோர் எண்ணிக்கை, பிரச்னைகள், இந்திய வளர்ச்சி வீதத்தில் சமமின்மை, தமிழக விவசாயிகளின் போராட்டத்தின் நியாயம், நன்கு விளைந்த போதும் கெடுக்கும் வேளாண்மை, உலகமயமாக்கலில் இந்தியாவின் தற்போதைய தேக்கம், வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகள், ஜி.எஸ்.டி. குறித்த விமர்சனம் என இன்றைய சூழலில் முக்கியத்துவமுடைய பல்வேறு துறைகளைப் பற்றியும் ஆழமான அலசல்களை உள்ளடக்கிய நூல் இது. கட்டுரைகள் எளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில்எழுதப்பட்டிருப்பது அவற்றின் தனிச் சிறப்பு.

சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட நாவலும்

அ. குமரேசன்

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த கூர்மையான விமர்சனங்களைக் கொண்ட நூல். அனைத்துச் சாதியினரும் ஆலய அர்ச்சகராக வழி செய்து கேரளத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணை, வெளிநாட்டுப் பொம்மைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கை, கமல்ஹாசன் மீது மதவாத அரசியலாளர்கள் தொடுத்த தாக்குதல், தமிழக ஆளுங்கட்சிக்குள் நடந்த வேடிக்கைகள் ஆகியவை உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த விமர்சனபூர்வமான அலசல்கள் இந்த நூலில் உள்ளன. செய்திகள் சார்ந்த அலசல்கள் மட்டுமல்லாமல் கருத்துச் சுதந்திரம், மூட நம்பிக்கைகள், பெண்களின் நிலை போன்ற பொதுவான பொருள்களும் அலசப்படுகின்றன.

நாடோடியின் நாட்குறிப்புகள்

சாரு நிவேதிதா

அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாருவின் எழுத்துகள்.

உள்ளடக்கத்தில் தீவிரம், கூர்மை ஆகியவை இருந்தாலும் தெளிவான மொழிநடையில் எதையும் சொல்லத் தெரிந்தவர். அபாரமான நகைச்சுவை இவரது படைப்பளுமையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து, அங்கதம் ததும்பும் காத்திரமான எதிரொலிகளின் தொகுப்பு இது.

வல்லமை தாராயோ

தமயந்தி

சமூகமும் பெண்ணுலக அரசியலும் இணைந்த ஒரு மையப்புள்ளியை நோக்கிப் பயணிக்கும் கட்டுரைகள் இவை. வர்க்க வேறுபாடுகளையும் சாதி அராஜகங்களையும் அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்கும் கட்டுரைகள். “ஈரச் சுவரின் வழி கசியும் வெயில் கீற்று நனைந்திருப்பது போலவே இத்தனை இருண்மைக்குள்ளே ஒரு ஒளி தீயாமல் காத்திருக்கிறது” என்று சொல்லும் தமயந்தி சமகாலப் பெண்களின் வாழ்நிலையை இந்தக் கட்டுரைகளில் தீவிரமாக ஆராய்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018