ரதசப்தமி : விஐபி தரிசனம் ரத்து!

ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு விஐபி தரிசனம் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படிகிறது. தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவிலிலும், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் ரத சப்தமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஜனவரி 24ஆம் தேதி ரத சப்தமி விழா நடைபெறவுள்ளது. ரதசப்தமியை முன்னிட்டு திருப்பதியில் அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, ஜனவரி 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்கள் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அந்த நாட்களில் அதிமுக்கியத்துவ விஐபிகள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 24ஆம் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமகன், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதானம், குடிநீர், மோர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சேவைகளை காணத் திருமலையில் 19 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.