கருவை கலைக்க அனுமதி: உயர் நீதிமன்றம்!

உடல் நலம், மன நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 28 வாரம் ஆகிவிட்ட கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தன்னுடைய வயிற்றில் வளரும் 28 வாரக் கரு, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகக் கூறியுள்ளார். இந்தக் கருவைப் பிரசவித்தால் தனக்கு மனரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்பதால் கருவை கலைக்க அனுமதி அளிக்குமாறு அந்த மனுவில், கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஜே.ஜே.மருத்துவமனை மருத்துவர்கள், அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், வயிற்றில் வளரும் கருவுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 28 வாரம் ஆனபோதிலும் கருவுக்கு வயிறு இன்னமும் உருவாகாததும் கண்டறியப்பட்டது.
இதனை நேற்று (ஜனவரி 9) பரீசிலித்த நீதிபதிகள் கருவின் உடல்நிலையையும், பெண்ணின் மனவேதனையையும் கருத்தில் கொண்டு, கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.