பேரிடர் நிதி: பினராயி மீது குற்றச்சாட்டு!


மாநில பேரிடர் நிவாரண நிதியைத் தனது சொந்த பயணத்திற்காக செலவு செய்ததாக கேரள முதல்வர் பினராயிக்கு எதிராக புகார் கிளம்பியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ஓகி புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் பல பகுதிகளை தாக்கியது. புயலால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். புயலால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல், மாநிலத்தில் உள்ளவர்களும் ஓகி நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பலரும் மாநில பேரிடர் அமைப்புக்கு தங்களின் நிவாரண நிதியை அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிதியைத் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக பினராயி மீது புகார் கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பினராயி விஜயன் திருச்சூரில் நடைபெற்ற சிபிஎம் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாடகை ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஓகி பாதிப்பு தொடர்பான மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சூர் திரும்பியுள்ளார். இதற்கு வாடகையாக ரூ. 8 லட்சத்தை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கும்படி திருவனந்தபுர மாவட்ட ஆட்சியருக்குக் கேரள அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. “முதல்வரின் கவனத்துக்கு தெரியாமலேயே இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. தற்போது அவரது உத்தரவின்படி இது ரத்து செய்யப்படுகிறது” என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.