மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

என் தோல்விக்கு என்ன பதில்?

என் தோல்விக்கு என்ன பதில்?

ஆர்.கே.நகர் படுதோல்வியை மூடி மறைக்க முயன்ற ஆளுங்கட்சியின் நிலைப்பாட்டை தனது கடிதம் மூலமாக உடைக்க முயன்றிருக்கிறார் அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனன்.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆளுங்கட்சி தனது அரசு இயந்திரத்தை முழு அளவில் பயன்படுத்தியும் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றும்கூட தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தோல்விக்குத் திமுகவும் தினகரனும் வைத்த கூட்டுதான் காரணம் என்று ஓர் அறிக்கையை விட்டுவிட்டு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப் போய்விட்டனர்.

இதில் அதிருப்தி அடைந்த மதுசூதனன் சில நாள்கள் பொது நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி நின்றவர், அண்மையில் ஓ,பன்னீர், எடப்பாடி ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “மதுசூதனன் கட்சியின் அவைத் தலைவர். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட முக்கியமான நிர்வாகி. இரட்டை இலை சின்னம் இந்த அணிக்கு வருவதற்குக் காரணமே அவைத் தலைவர் மதுசூதனன் இங்கே இருப்பதால்தான்.

ஆனால், கடந்த டிசம்பர் 25ஆம் தேதி இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைமைக் கழகத்தில் ஆய்வுக்கூட்டம் என்று கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பேசினர். தேர்தலில் தோல்வி அடைந்த மதுசூதனன் விளக்கமாகப் பேசுவதற்குக்கூட அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

அவர் பேசினால் அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. வெங்கடேஷ்பாபு, பாலகங்கா ஆகியோர் தன்னை தோற்கடித்துவிட்டதாகப் பேச திட்டமிட்டிருந்தார். இதை அறிந்துதான் அவரை அதிகம் பேசவிடாமல் தடுத்துவிட்டனர். டெபாசிட் இழந்த எதிர்க்கட்சி திமுக தொகுதியிலுள்ள வட்டங்களைக் கலைத்திருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக தான் அடைந்த அவமானத் தோல்வி பற்றி ஆராயக்கூட முன்வராத நிலையில் இருக்கிறது.

இதுபற்றி மதுசூதனன் பலமுறை ஓ.பன்னீரிடம் பேசியிருக்கிறார். ஆனால், பன்னீர் செய்த சமாதானம் எடுபடாமல் போனதால், ‘என் தோல்விக்கு என்ன பதில்?’ என்று கேட்டு 14 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பன்னீர், பழனிசாமி இருவருக்கும் எழுதியிருக்கிறார் மதுசூதனன்.

ஏற்கனவே எடப்பாடி அணி, ஓ.பன்னீர் அணி என்று இன்னும் பிளவுகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மதுசூதனனின் கடிதம் கட்சிக்குள் கரைச்சலை அதிகப்படுத்தியுள்ளது.

இப்போதைய நிலையில் தினகரன் ஆதரவாளர் தவிர்த்து வேறு யாரையும் நீக்கும் அளவில் கட்சித் தலைமை இல்லை. மதுசூதனின் கேள்வி ஒரு வேட்பாளர் என்ற முறையில் மட்டுமல்ல, கட்சியின் அவைத் தலைவர் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது” என்று கூறினார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018