மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: உண்மைக்கு அப்பாற்பட்ட யுகத்தில் ராமர் பாலம்!

சிறப்புக் கட்டுரை: உண்மைக்கு அப்பாற்பட்ட யுகத்தில் ராமர் பாலம்!

சி.பி.ராஜேந்திரன்

நாம் சுவாரஸ்யமான ஆனால் நிச்சயமற்ற தருணங்களை எதிர்கொண்டு வருகிறோம். உண்மைத் தகவல்களை முன்வைப்பதைவிடவும் உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலம் விவாதங்கள் மேற்கொள்ளப்படும் காலகட்டமான இதை சிலர் உண்மைக்குப் பிந்தைய அல்லது உண்மைக்கு அப்பாற்பட்ட யுகம் என்று குறிப்பிடுகின்றனர். ரால்ஃப் கீஸ் எழுதியுள்ளபடி, ‘ஒரு காலத்தில் உலகில் உண்மையும் பொய்யும் இருந்தன. இப்போது இங்கு உண்மை, பொய்கள் மற்றும் உண்மையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பொய் எனக் கூற முடியாத மிகவும் கனிவான அறிக்கைகள் உள்ளன.’

டிஸ்கவரி கம்யூனிகேஷன் ஸ்பான்சர் செய்யும் அறிவியல் சேனலில் ராமேஸ்வரம் கடற்கரை வங்காள விரிகுடா கடற்கரைக்கு அருகே ஆழமற்ற நீரில் உருவாகியுள்ள பவளப்பாறை ராமர் பாலம் பற்றி 2017 டிசம்பர் 11ஆம் தேதியன்று இரண்டரை நிமிட வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டபோது இந்த வகை அறிக்கைகள் இந்தியாவில் வைரலாகப் பரவின. ஊடகங்களின் சில பிரிவினர், ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளது போல ராமபிரானும் அவரது சேனைகளும் இலங்கையைச் சென்றடைய பாலம் கட்டினார்கள் என்ற கோட்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘அமெக்க விஞ்ஞானிகள்’ குழுவால் கண்டறியப்பட்ட இதைப் புதிய சான்றாக எடுத்துக் கூறின.

அரசியல் வர்க்கத்தினர் இந்த வீடியோ இனிவரவிருக்கும் ‘வாட் ஆன் எர்த்’ என்ற தொடருக்கான வெறும் ஒரு முன்னோட்டம்தான் என்ற உண்மையைப் புறக்கணித்துவிட்டு, இதைப் பெரிதாக்கிவிட்டனர். இந்தத் தொடர், பூமியின் மேற்பரப்பில் செயற்கைக்கோள் எடுத்த கவனத்தைக் கவர்ந்திழுக்கும் சில கட்டமைப்புகளின் புகைப்படங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறது.

இந்த வீடியோவில் சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ‘இந்தியாவிலிருந்து இலங்கை வரை சங்கிலித் தொடர் போல நீரில் மூழ்கியுள்ள பொருள்களை’க் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் போல தோன்றிய ஒருவரின் விமர்சனங்கள் தவிர, இந்த வீடியோவில் சில நிபுணர்களின் விமர்சனங்களும் இருந்தன. போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் புவியியல் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஆலன் லெஸ்டர், ராமபிரான் இலங்கையைச் சென்றடைவதற்காகக் கடலின் மேல் பாலம் கட்டிய சம்பவம் தொடர்பாகப் பேசுகிறார். பின்னர், வடமேற்கு இந்தியானா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைப் பேராசிரியர் எரின் ஆர்கியிலன், அங்கே கார்பனேட் கடல் படுகை, கார்பனேட் சூழலில் அடர்த்தியான, வெளிர் நீல நீர் இருப்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஆழமற்ற நீர் இருப்பதைக் குறிக்கிறது என்று பேசுகிறார். மூன்றாவது நிபுணரான, சதர்ன் ஆரிகான் பல்கலைக்கழத்தின் வரலாற்றுத் தொல்லியலாளர், ‘ஒரு துணை ஆசிரியர்’ செல்சியா ரோஸ், இந்தப் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் மணல் அடுக்குகளின் மேல் அமைந்துள்ள இவை 4000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார். ஆனால், இந்த காலத்தைக் கணிக்கும் முறை பற்றியோ அதில் எந்த அளவு பிழைகள் இருக்கலாம் என்பது குறித்தோ இதன் வர்ணனையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

மேலும், இந்தத் தனித்தனியான பாறைகள் இப்போது இருக்கும் இந்த இடத்துக்கு எப்படி வந்தன என்பது ஒரு மர்மம்தான் என்றும் ரோஸ் கூறுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் லெஸ்டர் மீண்டும் தோன்றி, ‘இந்தப் பாறைகள் வெகுதொலைவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன’ எனக் கூறுகிறார். வர்ணனையாளர் மீண்டும் தோன்றி, ‘இந்த இமேஜ்களில் குறிப்பாகப் புதிராக உள்ள விஷயம், என்னவென்றால் இந்தப் பாறைகள் இருக்கும் கடல் பகுதி ஒரு பண்டைய இந்துக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதை ஒரு மந்திரப் பாலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்கிறார். இத்துடன் புரோமோ வீடியோ முடிவடைகிறது.

அறிவியல் ஆதாரம் எங்கே?

இதில் பங்கேற்ற விஞ்ஞானிகளின் குழு தத்தம் துறைகளில் நிபுணர்களாக இருக்கலாம். ஆனால், குறிப்பாக இப்போது விவாதிக்கப்பட்டுவரும் விஷயத்தில் அறிவியல் ஆய்வினை மேற்கொள்ளாதவர்களாக இவர்கள் இருக்கலாம். இதை எரின் ஆர்கியிலன் இந்தக் கட்டுரை ஆசிரியரிடம் மின்னஞ்சல் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மேலும், அறிவியல் தொடர்பான உறுதியான முடிவை அடைவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல எனவும் அதைப் புதிரான முறையில் எடுத்துக்கூறுவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் தோன்றும் எந்த நிபுணரும் ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்று உறுதியாக கூறவில்லை. மேலும், இந்த வீடியோ இதுகுறித்து வெளிவந்த எந்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரை ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவும் இல்லை. வீடியோவில் காட்டப்பட்டதில் எந்த அறிவியல் விஷயமும் கிடையாது.

எந்த ஒரு விஷயத்திலும் அதில் நாம் கண்டடையக்கூடிய முடிவின் ஏற்புடைத்தன்மையைக் கடுமையான, கூர்மையான ஆய்வின் மூலமே மதிப்பிட முடியும். ஆனால், இந்த வீடியோவில் காட்டப்பட்டதில் எந்த அறிவியல் விஷயமும் இல்லை. எனவே, ராமர் பாலத்தின் தோற்றம் குறித்து இந்த வர்ணனை மற்றும் காட்சிகளை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.

சேது சமுத்திரம், பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தேசிய கடல் உயிர்க்கோளம், கடலின் ஒரு பகுதியான இது தொடர்ச்சியாக இயற்கை வண்டல் படிவு செயல்முறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இயற்கைச் செயல்பாடு, பவளப் பாறைகளை உருவாக்கிவருகிறது. 22,00ஆண்டுகளுக்கு முன்பு உறைபனிப் பரவல் இடைவெளி உச்சத்தில் இருந்தபோது, சேது சமுத்திரத்தின் பகுதிகள் உள்பட இந்தியாவின் நீண்ட கடற்கரை நீர்மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டது.

சில ஆய்வுகளில் 1,200 மற்றும் 7000 ஆண்டுகளுக்கு இடையே, ‘லிட்டில் ஐஸ் ஏஜ்’ எனக் குறிப்பிடப்படும் ஓர் இடைவெளியின்போது, கடல் மட்டம் குறைந்தது எனத் தெரியவந்தது. கடல் மட்டம் உயர்ந்தபோது புதிதாக மூழ்கியுள்ள தளங்களில் பவளப்பாறை பாலிப்கள் மீண்டும் உயரமாக வளர்ந்தன. எனவே, பவளக் கற்பாறைகள் 70,000 மற்றும் 40,000 ஆண்டுகள் முந்தையது என்ற கண்டுபிடிப்பில் எந்த ஆச்சர்யமும் இல்லை. மேலும் பழைய பாறைகள் இளம் பாறைகளின் மேல் படிவதும் வழக்கம்தான்.

இந்த மாதிரியான ஆழமற்ற கடல் தளங்கள், தொலைதூரக் கடல்களிலிருந்து கடந்துவந்த மனிதக் குடியேறிகளின் பல்வேறு தலைமுறையினர் ஆழமற்ற கடல் தளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பாறைகள் வேறு ஏதோ இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன என்ற கூற்று மனித தலையீடு காரணமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்துவந்த சூறாவளிகள், எப்போதாவது நிகழ்ந்த சுனாமிகளால் இந்தப் பாறைகள் அடித்துக்கொண்டு வரப்பட்டிருக்கலாம். 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி கடுமையான சூறாவளி உண்டானது. இந்தப் புயல் அலை எழுச்சி தனுஷ்கோடி தீவை மட்டுமல்லாமல் பவளக் கற்பாறைகள் உட்படப் பல பொருள்களை அடித்துக்கொண்டு போய் வேறு இடத்தில் குவித்திருக்கும்.

மற்றொரு மோசமான சூறாவளி கி.பி.1480இல் நிகழ்ந்தது. இதுவும் பல மாற்றங்களை ஏற்படுத்தின எனப் பதிவாகியுள்ளது. பவளப் பாறைகளின் வழித்தடங்களை எண் சார்ந்த முறையில் வரிசைப்படுத்துவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். ராமாயணம் கி.மு.220, கி.பி.300க்கும் இடையே எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இது உண்மை, பழங்கதை மற்றும் கற்பனை கலந்தது என்று வரலாற்று ஆசிரியர் உபிந்தர் சிங் தனது ‘பொலிட்டிக்கல் வயலன்ஸ் இன் ஏன்ஷியன்ட் இந்தியா’ (2017) என்னும் நூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மை: மக்களும் விஞ்ஞானிகளும்

பொதுமக்கள் தாங்கள் கேட்க விரும்புவதைத்தான் கேட்பார்கள். மக்கள் தாங்கள் யார் பக்கம் சார்ந்துள்ளனரோ அந்த ஆதாரங்களிலிருந்தே செய்திகளைப் பெறுகிறார்கள். ஆஸ்டின், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கத்லீன் ஹிக்கின்ஸ், நேச்சர் இதழில் எழுதிய கட்டுரையில் ‘உண்மைக்கு அப்பாற்பட்ட இன்றைய காலகட்டத்தின் போக்குகளிலிருந்து பலனடையும் அரசியல்வாதிகளும் உண்மையைத்தான் சார்ந்துள்ளனர். இதை இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதால் அல்ல. இவர்கள், மற்றவர்கள் உண்மையைத்தான் கூறுகிறார்கள் என்று குறைந்தபட்சம் பெரும்பாலான நேரங்களில் நம்பும் மக்களின் நல்ல தன்மைகளையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

உண்மைக்கு அப்பாற்பட்ட என்பது விஞ்ஞானிகளுக்கு வெறுக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும், இவர்கள் எப்போதும் விஞ்ஞானத்தின் உருமாற்றும் ஆற்றலை மறக்கவே கூடாது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள நல்லொழுக்கங்கள், பகுத்தறியும் சிந்தனை, நீடித்த ஆராய்ச்சி மனம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் நம்பிக்கைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் கூடுதல் பொறுப்பு விஞ்ஞானிகளுக்கு உள்ளது. வளர்ந்துவரும் ஒரு சமூகத்தில், உண்மையைத் தொடர்ந்து மறுத்துவரும் ஒரு நிலவரத்தில் வாழ்வது பின்னடைவை நோக்கிச் செல்வதைப்போன்றதுதான்.

கட்டுரையாளர் சி.பி. ராஜேந்திரன், பெங்களூரில் உள்ள மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையத்தில் ஜியோடைனமிக்ஸில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

நன்றி: https://thewire.in/211170/post-truth-take-ram-setu/

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 10 ஜன 2018