மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 7

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 7

கேபிள் சங்கர்

சூர்யாவும் ஜோதிகாவும் எங்களுக்குள் எந்தவிதமான உறவும் இல்லை. வெறும் நடிகர்கள் என்று மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக்கொண்டு, காதலித்துக்கொண்டிருந்த நேரம். இருவரும் சேர்ந்து நடித்த படம். எனவே படத்துக்கு வியாபாரம் நிச்சயம் என்ற முடிவில் புரொடக்ஷன் மானேஜராக வலம்வந்து கொண்டிருந்த சிவகுமார் என்பவர் படத் தயாரிப்பாளர் ஆன கதை.

ஜெயா என்கிற அறிமுக இயக்குநரின் நல்ல கதை. அண்ணன் தம்பிகளுக்கிடையே தம்பிக்கு மட்டும் அதீத அன்பைப் பகிர்வதால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக அண்ணன் எதிர்கொள்ளும் பிரச்னைகள். அதன் தீவிரம் என உளவியல் ரீதியாக அமைந்திருந்தது கதை. இந்தக் கதை மனோரீதியாக நன்கு கையாளப்பட்டு, சரியான கமர்ஷியல் முலாம் பூசப்பட்ட திரைக்கதை எல்லாம் சிறப்பாக அமைய, பாலகுமாரன் வசனம், சூர்யா, ஜோதிகா, ரகுவரன், சிவகுமார் என நடிகர்கள் தேர்வும் அட்டகாசமாக அமைந்தது. நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லாம் சிறப்பாக இருக்க படத்தின் மீதான வியாபாரிகளின் எதிர்பார்ப்பும் அதிகமாகியது. அப்போதெல்லாம் படம் பற்றிய நல்ல டாக் இருந்தாலே விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுப்பார்கள். அப்படி முன்பணம் எல்லாம் ஏரியாக்களின் மேல் வாங்கியாகிவிட்டது. எல்லாமே சுபமாக போய்க்கொண்டிருந்தால் எப்படி? பிரச்னை வேறு ரூபத்தில் வந்தது.

படத்தின் நெகட்டிவ் மீது பைனான்ஸ் வாங்கித்தான் படம் ஆரம்பமானது. நடுவில் கொஞ்சம் பணப் பிரச்னை. அதையெல்லாம் தாண்டி படம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ‘அண்ணே நீங்க ஏன் நடிக்கக் கூடாது?’ என அந்தத் தயாரிப்பாளர் சிவகுமாரிடம் யாரோ சொல்லிவிட்டார்கள். பிறகென்ன, ‘படமோ வியாபாரம் ஆயிருச்சு... நடுவுல சேர்த்திருவோம்’ என்று சும்மா நாயகியின் அண்ணன் ஒரு ரவுடி என்று இருந்ததை பில்டப் செய்து குத்துப் பாட்டெல்லாம் வைத்து, பட்ஜெட் இழுத்து, கதையின்படி நாயகனுக்கும் அவனது அண்ணனுக்குமான பிரச்னை என்பது போய், படத்தின் நடுவே தயாரிப்பாளரின் கேரக்டர் பெரிதாக வர, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போய்விட்டது படம். இதெல்லாம் படம் வெளியானபோது கிடைத்த உண்மையான ஃபீட்பேக். படம் தயாரிக்கும்போதோ, ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கும்போதோ, இதையெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். இயக்குநர் முதற்கொண்டு, வேறு வழியேயில்லாமல் பாராட்டித்தான் ஆக வேண்டிய கட்டாயம். தயாரிப்பாளர் ஆயிற்றே?

இதனிடையே படத்துக்கு வாங்கிய பைனான்ஸ், வெளியே கடன் எல்லாம் ஏற்பாடு செய்து, புதிய படமொன்றுக்குப் பூஜையும் போட்டாகிவிட்டது. உயிரிலே கலந்தது படத்துக்கு எண்பது லட்ச ரூபாய் பற்றாக்குறை. அதை லேப்பில் செட்டில் செய்தால்தான் படம் வெளிவரும் என்ற சூழல். தயாரிப்பாளரோ ஆளைக் காணோம். பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்கள், வேறு வழியேயில்லாமல் பைனான்ஸியரைக் கூப்பிட்டு, பஞ்சாயத்து ஆரம்பமாகிவிட்டது. தங்களுக்கு வர வேண்டிய பாக்கித் தொகைக்காகப் படத்தில் நடித்திருந்த முக்கிய நடிகர்கள் எல்லோருமே லேப்பில் லெட்டர் கொடுத்திருந்தார்கள்.

நடிகர்களிடம் விநியோகஸ்தர்கள் நிலையைச் சொல்லி, விட்டுக் கொடுக்கும்படி கேட்க, சூர்யா, ரகுவரன், சிவகுமார் போன்றோர் விட்டுக் கொடுத்தார்கள். தயாரிப்பாளரைத் தேடிப்பிடித்துக் கூட்டிவந்து அவரின் பூஜை போட்ட படத்தின் மேல் ஏரியா ரைட்ஸ், ஆடியோ என எடுக்கவே ஆரம்பிக்காத அந்தப் படத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் பைனான்ஸியர் எழுதி வாங்கிக்கொண்டும், விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கிய அத்தனை ஏரியாக்களின் வியாபாரப் பணத்தையும் கடனுக்கு என்று வாங்கிக்கொண்டாலும், பத்து லட்ச ரூபாய் பற்றாக்குறை.

படம் ரிலீஸ் ஆக வேண்டிய வெள்ளிக்கிழமை மதியம் வரை பஞ்சாயத்து ஓடியது. மாலைக் காட்சிக்குள் டி.கே. ஏரியாவுக்கும் சிட்டிக்கும் பிரின்ட் போகவில்லையென்றால் அம்புட்டுத்தான் என்கிற நிலையில், இயக்குநர் ஆக்ஸிடெண்ட் ஆன கைக்கட்டோடு, கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். எல்லா விநியோகஸ்தர்களிடமும் கெஞ்சிக்கொண்டிருந்தார். ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்து ரிலீஸ் பண்ணுங்க. என் அடுத்த படத்து சம்பளத்துலயாவது வாங்கி உங்களுக்கு கொடுத்துடறேன்’ என்றார். அடுத்த படம் என்பது இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு அப்புறம் என்பது எல்லாருக்கும் தெரியும். அனைவரும் கூடிப் பேசி ஆளுக்கு ஒரு லட்சம் ஏரியாவுக்குப் பேசிய தொகைக்கு மேல் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள். அதை முடிவு செய்ய தனியே ஓட்டலில் ரூம் போட்டுப் பேசினார்கள்.

அதில் சிட்டி ரைட்ஸ் வாங்கிய நாங்கள் அவுட்ரைட் அடிப்படையில் வாங்கியிருந்தோம். நாங்கள் எதற்கும் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு இது முதல் புராஜெக்ட். படத்தின் ஆரம்பதிலிருந்து கதையெல்லாம் கேட்டு, பணம் அட்வான்ஸ் கொடுத்தவர்கள். ஒரு லட்சத்தில் முதல் புராஜெக்ட் நம்மால் ட்ராப் ஆக வேண்டாம் என்று முடிவு செய்து கொடுத்தோம். ஊரே சிரித்தது.

இப்படி எல்லாரும் தங்கள் பங்குக்கு விட்டுக்கொடுத்தும் சில லட்சங்கள் கொடுத்தே ஆக வேண்டிய நிலை. இதற்கிடையே, டான்ஸ் அசோசியேஷனிலிருந்து பாக்கி பணத்துக்கான புது புகார் வர, அவர்களையும் பேசி அனுப்ப வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தர்களுக்கு வந்தது. 80 லட்ச ரூபாய் டெபிசிட்டை எல்லாருடய விட்டுக்கொடுத்தல் காரணமாய் நாற்பதுக்குக் கொண்டுவந்தாயிற்று, அதில்தான் துண்டு. தயாரிப்பாளர் இறுக்கமாய் முகத்தை வைத்துக்கொண்டு “என்கிட்ட இருக்குறது இந்த சாண்ட்ரோ கார் மட்டும்தான். அதைக் கொடுத்துடறேன்” என்று சாவியை டேபிள் மேல் வைக்க, பைனான்ஸியர்கள் அவரின் காரை எடுத்துக்கொண்டு பணத்தோடு கிளம்பினார்கள். பெட்டியும் லேபிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரும் கிளம்பினார். படத்தின் ரிசல்ட் பெரும் தோல்வி.

நல்ல பைனான்ஸியர்கள், நடிகர்கள், கதை, டெக்னீஷியன்கள் என எல்லாமே சரியாகக் கிடைத்தும், சினிமாத் துறையில் தயாரிப்பு நிர்வாக அனுபவம் இருந்தும் எதையும் வெச்சி வாழத் தெரியாமல், பணத்தை ஆளும் தகுதி இல்லாமல், சரியான திட்டமிடல் இல்லாமை என பல இல்லாமைகளால் நல்ல கதை பாழாகியது மட்டுமில்லாமல் அந்தத் தயாரிப்பாளர் தன் எதிர்காலத்தை மட்டுமில்லாமல் அந்த இயக்குநரின் எதிர்காலத்தை இன்றுவரைக்கும் கேள்விக்குறியாக்கிவிட்டார்.

படப் பெட்டியெல்லாம் லேப்பிலிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பும்போது புதுசாக ஒரு சேட்ஜி பரபரப்பாய் உள்ளே நுழைந்தார். தயாரிப்பாளர் எங்கே என்று அனைவரையும் கேட்டுக்கொண்டிருந்தார். போனை எடுத்து அவருக்கு அடித்துக்கொண்டிருந்தார். எடுக்கவில்லை. என்னங்க பிரச்னை என்று கேட்டபோது “என்கிட்ட பிரைவேட்டா பைனான்ஸ் வாங்கி, வாங்குன காரை யாருக்கோ கொடுத்துட்டாராமே?” என்றார்.

தமிழ் சினிமாவைக் கந்து வட்டிதான் இயக்குகிறதா?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கந்து வட்டி-1

கந்து வட்டி-2

கந்து வட்டி-3

கந்து வட்டி-4

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 10 ஜன 2018