அழைப்பு துண்டிப்பு பிரச்னைகளுக்குத் தீர்வு!

அதிகரித்துவரும் அழைப்பு துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி (நாளை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் இந்தியாவின் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளைத் தனித்தனியே சந்தித்து அழைப்புத் துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆலோசனையில் தொலைத் தொடர்புத் துறை ஈடுபடும் என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அழைப்பு துண்டிப்புப் பிரச்னைகள் மட்டுமல்லாமல் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த அக்டோபரில் அமல்படுத்திய தரச் சேவை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படும். சேவைகளின் தரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.