பூங்குன்றன் ஆஜர்!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் முன்பு, ஜெ. உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட சந்தேகத்தை அடுத்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம் செய்யப்பட்டார். முதலில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரம் வடிவில் தங்கள் தகவலை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா, தீபக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷைய்யன், அப்பல்லோ நிர்வாகம் சார்பில் சத்யபாமா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது .
இது மட்டுமல்லாமல் சசிகலா, தினகரன், வெற்றிவேல், கிருஷ்ணப் பிரியா, ஜெ உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலா உறவினர் மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.