மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! - பகுதி 2

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! - பகுதி 2

கோல்டன் குளோபின் செசில் பி.டிமிலே விருதினைப் பெற்ற ஓப்ரா வின்ஃப்ரேவின் பேச்சு உலகப் பெண்களிடையேயும், பெண்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்து போராடுபவர்களிடையேயும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மின்னம்பலத்தில் காலை வெளியிட்ட ஒப்ரா வின்ஃப்ரே உரையின் தொடர்ச்சி...

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை- பகுதி 1

இந்த அறையிலிருக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட்ட காரணம் நாம் வெளியே சொன்ன கதைகள். இந்த வருடம் நாம் கதையாகவே மாறிவிட்டோம். அவை பொழுதுபோக்குத் துறையை மாற்றும் கதை அல்ல. கலாச்சாரம், நிலவியல், இனம், மதம், அரசியல், பணி என எல்லா தளங்களையும் மாற்றியமைக்கும் கதைகள். எனவே, பல வருடங்கள் என் தாயைப் போல குழந்தைகளின் உணவுக்காகவும், பில் கட்டத் தேவையான பணத்துக்காகவும், கனவுகளை நிறைவேற்றவும் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்ட என் பெண்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இவர்களது பெயர் எப்போதும் வெளியே தெரியாது. அவர்கள் வீட்டு வேலையும், விவசாய வேலையும் செய்பவர்கள். அவர்கள் தொழிற்சாலைகளிலும், உணவகங்களிலும், அகாதமியிலும், பொறியியல் நிறுவனங்களிலும், மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் பணிபுரிபவர்கள். இந்த உலகத்தின், தொழில்நுட்பத்தின், அரசியலின், அறிவியலின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் அவர்கள். ஒலிம்பிக்கில் தடகள வீராங்கனையாகவும், இராணுவத்தில் சிப்பாயாகவும் இருக்கிறார்கள். இதில் இன்னொருவரும் இருக்கிறார். அவர் பெயர் ரெசி டெய்லர். இந்தப் பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும் என நினைத்தேன்.

1944இல் ரெசி டெய்லர் ஒரு இளம் மனைவியாகவும், தாயாகவும் இருந்தார். அலா நகரத்தின் அபெவிலே ஊரிலுள்ள சர்ச்சிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஆயுதம் தாங்கிய ஆறு வெள்ளை நிற ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் தெருவில் தள்ளப்பட்டிருந்தார். உண்மையை யாரிடமாவது சொன்னால் கொல்லப்படுவாள் என மிரட்டப்பட்டிருந்தபோதும், ரோசா பார்க்ஸ் என்ற இளம் பெண் இந்த வழக்கை விசாரித்ததால் இந்த செய்தி NAACPஇல் வெளியானது. ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் நீதி கேட்டனர். ஆனால், அங்கு நேரம் முடிந்துபோனது. அவர்களது நேரம் முடிந்துபோயிருந்தாலும், ரெசி டெய்லர் ஒரு உண்மையை உணர்ந்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என விருப்பப்படுகிறேன். அவள் மட்டுமல்லாமல், அவளைப்போல அக்காலத்தில் துன்புறுத்தப்பட்ட பெண்கள், ஏன் இக்காலத்திலும் துன்புறுத்தப்படும் பெண்களுக்குமாக சேர்த்து பலர் இப்போது பேரணி செல்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டு அவள் இறந்திருக்கலாம்.

மாண்ட்கோமெரியின் பேருந்தில் உட்கார்ந்துகொண்டிருந்த ரோசா பார்க்ஸ் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் 11 ஆண்டுகளுக்குப்பிறகு தோன்றிய ‘Me Too' என்ற எண்ணம்; இப்போது இங்கே உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தோன்றியிருக்கிறது. ‘Me Too' என்று சொல்லத் துணிந்திருக்கும் அனைத்து ஆண்களின் மனதிலும் தோன்றியிருக்கிறது.

என்னுடைய திரைவாழ்வில், தொலைக்காட்சியாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் நான் சொல்ல நினைத்ததெல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் உண்மையில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான். அவமானம் எப்படியாக இருக்கிறது; எப்படி காதலிக்கிறோம்; எப்படி கோபப்படுகிறோம்; எப்படி தோல்வியடைகிறோம்; எங்கு பின்வாங்குகிறோம்; கடைசியாக எப்படி அவற்றிலிருந்து மீண்டு வருகிறோம் என்பதைத்தான் நான் சொல்ல முயற்சித்தேன்.

வாழ்க்கை கொடுக்கக்கூடிய எத்தனையோ மோசமான சூழ்நிலைகளை எதிர்த்துவந்த பலரை நான் பேட்டியெடுத்திருக்கிறேன். அவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே திறன், இருள் நெறிக்கும் இரவிலும் பிரகாசமான காலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்பிக்கை தான். எனவே, இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்வது, அடிவானத்தில் ஒரு புதிய நாள் காத்திருக்கிறது. அந்த புதிய நாள் உதிப்பதற்குக் காரணமாக பல அற்புதமான பெண்கள் இருப்பார்கள். அவர்களில் பலர் இதோ இந்த அறையில் உட்கார்ந்திருக்கும் பெண்களாக இருப்பார்கள். அவர்களுடன் தனித்துவம் வாய்ந்த சில ஆண்களும் இருப்பார்கள். கடுமையாகப் போராடி, கண்டிப்பாக தலைவர்களாக உருவாகி இந்த உலகில் யாருமே ‘Me Too' என்று சொல்லத் தேவையில்லாத ஒரு சூழலை அவர்கள் உருவாக்குவார்கள். நன்றி.

உரை முடிந்தது

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018