மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஒடுங்கும் இந்திய ஊரகம்!

ஒடுங்கும் இந்திய ஊரகம்!

ஜெ.ஜெயரஞ்சன்

இந்திய ஊரகம் குறித்த சமீபத்திய புள்ளி விவரங்கள் அது மேலும் ஒடுங்குவதை தெளிவாகப் படம் பிடிக்கிறது. ஊரக கூலி, வேளாண் பொருட்களுக்கான விலை மற்றும் வேளாண்மையின் பரப்பு ஆகிய குறியீடுகள் அனைத்தும் சீரழிவையே சுட்டுகின்றன. ஏற்கெனவே சீரழிந்துவரும் ஊரகம் மேலும் சீரழிவதையே இவை குறிக்கின்றன.

அக்டோபர் மாதத்திற்கும் ஜனவரி மாதத்திற்குமிடையில் வரும் குளிர்காலத்தின் மிக முக்கியமானப் பயிர் கோதுமை. அதன் பரப்பு 5 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்குக் காரணம் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 10 லட்சம் ஹெக்டேர் கோதுமை விதைக்கப்படவில்லை. அதேபோல எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பும் 5 விழுக்காடு குறைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் குறிப்பிடத்தகுந்த அளவில் கடுகு சாகுபடி செய்யப்படும். (வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது) அங்கு கடுகு சாகுபடி பரப்பு 7 லட்சம் ஹெக்டேர் அளவு குறைந்தே பயிரிடப்பட்டுள்ளது.

இதுவொரு புறமிருக்க ஊரக கூலி மட்டம் மிகவும் மந்தமாக உயர்கிறது. தேவை அதிகரித்தால் தான் கூலி உயரும். தேவைக் குறைந்ததையே இது சுட்டுகிறது.

இதேவேளையில், வேளாண் பொருட்களுக்கான விலை தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது. இவை எல்லாமுமாகச் சேர்ந்துதான் இந்திய ஊரகம் ஒடுங்குவதையும் மேலும் சீரழிவதையும் நமக்குக் காட்டுகின்றன.

மழைக்காலத்தில் போதுமான மழைப்பொழிவு இல்லாததால் தான் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. ஏற்கனவே அதற்கு முந்தைய பருவத்தில் (காரிஃப்) சாகுபடி பரப்பு 3 விழுக்காடு குறைந்தபின் இது நிகழ்ந்துள்ளது.

ஊரக கூலி மட்டம் 2013-14ஆம் ஆண்டுகளில் 17-18 சதவிகிதம் என்றளவில் உயர்ந்தன. ஆனால் தற்போது 6 சதவிகிதம் என்றளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. தற்போது இந்த உயர்வு பணமதிப்பின் அடிப்படையில் தான். அதாவது சென்ற வருடம் 100 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் இந்த வருடம் 106 ரூபாய்க்கு வாங்குகின்றனர். ஆனால் விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டால் இக்கூலி மட்ட உயர்வு ஒன்றுமில்லை என்பது புலனாகும்.

தங்கள் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை வேண்டுமென்றும் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வேளாண் குடியினர் பல மாநிலங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் எந்த தகுந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை என்பதே உண்மை. பாஜக தலைமையிலான அரசு ஒன்றியத்தில் பொறுப்பேற்ற பின் வேளாண் துறையின் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 1.9 விழுக்காடு என்ற அளவில்தான் உள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018